>

Friday, May 22, 2009

குருவிகள் போயின போயின


அடர்ந்த கரும்புதருக்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின
அதிகாலை மின்னும் சிறகுகளுடனும் குறுந்தலைகளுடனும்

எனது தலையை அவற்றின் பறத்தலுக்காகத் திறந்து கொடுத்தேன்
ஒன்றாகி இரண்டாகி நூறாகி ஆயிரமாகிக் கலைந்தன

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் சிறகுகளும் சுவாசிப்பதற்காக
விண்ணெங்கும் அலைந்து கொண்டேயிருந்தன ஒரே குருவியாகி

புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்

ஊழியின் பெருவலி என்னகத்தே உள்ளது என்பதால் இன்னும் உறங்காமல் இருக்கின்றன குஞ்சுகளும் கனவுகளும் புதருக்குளே

குட்டி ரேவதி

Thursday, May 21, 2009

அரசியல் பிழை

வரலாறு எனும் சொல் கண்ணீர்த்துளிகளாக உதிர்ந்து வாடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றுக்கும் தான் வேறென்ன இலக்கு? இறந்த காலங்களின் வீதியில் நாயாய் அலையச்சொல்லும். பேய்களைக் கைப்பிடிக்கச்சொல்லும்.

ஆனால் மன்னவர்களே... நான் சொல்ல வந்தது அதுவன்று. இரத்தம் உலர்ந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றியதுமல்ல. கொடிகள் படபடக்கும் வாகனங்களுடன் அலையும் அரசியலைப்பற்றியும் அவற்றின் மீது சவாரியாகும் பணமூட்டைகளைப் பற்றியும் தாம்.

ஒரு நினைவோ அல்லது நினைவுகளுக்கிடையே ஆவியாகும் நிகழ்வுகளோ சுவாரசியமாவதில்லை. வேகமெடுக்கும் மன்னர்களின் வெற்றிகள் தாம். மண்ணை முத்தமிடும், பெண்களைக் களவு கொள்ளும் மன்னர்கள் வரலாற்றுக்குப் புளித்துப்போனவர்கள். காதுக்குடைச்சல்கள்.

வரலாற்றோடு அடையாளப்படுத்திக்கொள்ள மண்ணை நக்கவும் தயாராகும் மன்னவர்களே இன்னும் இன்னும் புதுமையாக ஏதும் செய்யுங்கள். முத்தங்கள் கூட மின்னஞ்சலில் நீராவியைப்போல மறைந்து போகின்றன என்பதால் தீவிரமாக யோசித்தோ யோசிக்க சிரமமாயிருந்தால் சிந்தனையை இரவல் வாங்கியோ வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுங்கள்.

செய்தித்தாள்களும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் உலகம் மொத்தத்திற்குமான திரைச்சீலையாகி உங்கள் முகம் முன்னே அலைபாயும். அவற்றில் உங்கள் முகம் எதிரொளித்து அடங்கும் வரை பேதலிப்பாய் கவனியுங்கள்.

வரலாற்றிலிருந்து திருடி தனது கதையென எழுதும் எழுத்தாளனை நானறிவேன். வரலாறு எனும் சொல் அவன் கண்ணில் நீலியின் கண்ணீர்த்துளிகள் போன்றவை. அதற்குமேல் அவன் தின்பதெல்லாம் மண்ணும் மண்ணில் புதைந்த அவன் மூதாதையர் என்புகளும்.


ஆகவே விரைவாக செய்யுங்கள்: பெண்களின் யோனியை மனிதர்களுக்கான மயானமாக்கிச் சாம்பல் பூசிக்கொள்ளலாம் அல்லது மனித உடலை நாயாகக் கற்பனை செய்து கோரப்படுத்தலாம். மரங்களுக்கு தீயின் வெயிலை உணவாக்கலாம்.

நண்பர்களிடம் உறக்கம் தொலைத்துப் பேசுங்கள். இப்படியேனும் நீங்கள் அரசியலை நெய்யவில்லையென்றால் வரலாற்றின் பக்கங்களில் உங்களுக்கு இடமிலாது போய்விடும். அரசியலின் பிழைகள்மீது வரலாறு வன்மம் கொள்ளாது. ஆகவே மன்னவர்களே...


குட்டி ரேவதி

Tuesday, May 5, 2009

வெகுமானம்

கவிதை எழுதுவதற்கும் அதை ஒரு தொடர் இலக்கியப்பயணமாக மாற்றிக்கொள்வதற்கும் பல தருணங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தது புஷ்கினின் ஒரு கவிதைப்பத்தி தான். தமிழகச்சூழலில் கவிஞர், அதிலும் ஒரு நவீனக் கவிஞர் எனப்படுபவர் பல தளங்களில் தன்னை தனது ஆளுமையை நிறுவ போராடவும் தொடர்ந்து உழைக்கவும் வேண்டியிருக்கிறது. அத்தகையதோர் இலக்கிய அரசியல் கட்டுமானம் தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. புஷ்கினின் வரிகள் இந்த அரசியலை எவ்வாறு தனி மனித அளவில் எதிர்கொள்ள வேண்டும் எனும் அறச்செயல்பாட்டை விளக்குவதாக உணர்கிறேன்.
”நீ ஒரு அரசன். தனிமையில் வாழ்ந்திரு
சுதந்திரமான பாதையில்
உனது தளையற்ற மனம்
எங்கே அழைத்துப்போகிறதோ அதைத் தொடர்ந்து போ
நேசிக்கப்பட்ட சிந்தனையின் கனிகளைக் கனியவிடு
நிறைவேற்றிய உன்னதச்செயல்களுக்கு வெகுமானம் கேட்காதே
வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை
நீயே உனது உன்னத நீதிபதி
எவரும் துல்லியமாக உன் படைப்பைத் தீர்ப்பிடார் ஒருபோதும்
நுட்பமான கலைஞனே! உனக்கு அது சந்தோஷம்தானா?” எனும் புஷ்கினின் வரிகள் இன்று வரை என் கவிதை நெஞ்சிற்கு உரமாகவும் வெளிச்சமாகவும் இருந்து வருகின்றன. இவ்வரிகளை பத்து வருடங்களுக்கு முன்பு காஞ்சனை திரைப்பட இயக்கம் தனது ஓவியம் குறித்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் ஒன்றில் அச்சிட்டிருந்தது. இன்றும் இறைச்சிப் பொருளாய் உள்ளிறங்கி எனது நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி ஒரு பாய்ச்சலையும் துணிவையும் தந்து கொண்டேயிருக்கின்றன அவ்வரிகள்.
தமிழ்ச்சூழல் முன்பினும் அதிகமாய் குழு மயமாகவும் கருத்தியல் வலு இழந்தும் போய்விட்டதை என்னால் நன்கு உணரமுடிகிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக கவிதைக்கும் எழுத்துக்கும் எழுத்தாளர்க்கும் இருந்த மரியாதையைக் கூட இப்பொழுது உணரமுடியவில்லை. எல்லா படைப்பாளிகளும் வாழ்வியல் போராட்டத்தை எதிர்கொள்ளும் துணிவையிழந்து கொண்டிருக்கின்றனர். இளம் படைப்பாளிகளுக்கு வழங்க இவர்களிடமோ இவர்களின் படைப்புகளிலோ ஒன்றுமில்லாமல் போய் ஒரு வெக்கை எங்கெங்கும் பரவியிருக்கிறது. தன்னை முன்னிறுத்தும் போரில் ஒருவரையொருவர் காலையிழுத்து வீழ்ந்து நகைக்க வைக்கும் நிகழ்வுகளுடன் தாம் வாழ்ந்தும் எழுதியும் கொண்டிருக்கும் மூத்த படிப்பாளிகள் நினைவில் உலவுகின்றனர். தமிழக அரசியல் திருப்பங்களை விட இலக்கியத்தளம் பல அதிர்ச்சியான திருப்புமுனைகளையும் வீழ்ச்சியையும் கண்டுள்ளதை எந்த ஒரு நேர்மையான அவதானிப்பும் சமூக அக்கறை உள்ள படைப்பாளியும் கண்டுகொள்ள முடியும்.
எந்த கருத்தியல் மலர்ச்சியும் சமீபத்தில் நிகழவில்லை. ஏற்கெனவே பொங்கியெழுந்த பெண்ணியத்தின் உடலரசியல் கருத்தியலும் தலித் பெண்ணியமும் அவற்றை விவாதித்து சிந்தனைத்தளத்தை விரிவுபடுத்தும் காழ்ப்புணர்வற்ற இலக்கிய விமர்சகர்களின்றி தேங்கிப்போய்விட்டது. எந்த ஒரு தீர்க்கமான பாதையும் அற்று பெண்ணியம் தடுமாறுவதை பெண்ணியவாதிகள் எனப்படுவோர் வேடிக்கைப்பார்த்து இருப்பதுடன் தாம் ஏற்கெனவே நிறுவிக்கொண்ட பெண்ணிய கொட்டிலுக்குத்தீனி போடுவதில் மும்முரமாக இருக்கின்றனர். அந்த வகையில் பெண்ணியம் என்பது குருடன் தடவிப்பார்த்து வருணித்த யானையைப்போலவே பிரமாண்டம் எடுத்துள்ளது.
இலக்கிய உலகின் நம்பகங்கள் பொய்யாகும் போதும், எழுத்துப்பயணத்தில் இடர்களைச் சந்திக்கும் போதும், நாம் விதந்தோதும் இலக்கிய ஆளுமைகள் அறம் மீறி அதிகாரத்தை நோக்கியும், அங்கீகாரத்தின் பொருட்டும் பயணப்படும்போதும் மேற்குறிப்பிட்ட புஷ்கினின் வரிகள் இருட்டில் விளக்குக்கம்பங்களாக உயர்ந்து நின்று வழிகாட்டிக்கொண்டேயிருக்கின்றன. இன்னும் இன்னும் அவற்றில் ஊற்றெடுக்கும் அறச்சிந்தனைகள் என்பவையும், அவ்வரிகளைக் கைகளில் கொண்டு பயணத்தைத்தொடரும் படைப்பாளி சந்திக்கும் தருணங்களையும் அவர் சேகரிக்கும் அனுபவங்களையும் பொறுத்தது. அங்கீகாரம் தேடும் கலைஞன் ஒருவன் எத்தகையதோர் அங்கீகாரத்தை அவன் ஏற்கவேண்டும் என்ற தெளிவையும் அதற்கான துணிவையும் வழங்குகிறது. இந்தக்குறிப்பிட்ட தருணத்தில் ’வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை’ எனும் வரி எத்தகையதோர் இருளழிந்த பாதையை திறந்து கொடுக்கின்றது.
-குட்டி ரேவதி