>

Monday, June 1, 2009

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை


அரசியல் பொருளை மையமாக வைத்துக்கொண்டு எழுத வரும்போதெல்லாம் சில பொதுவான புத்திகள் தமிழ் எழுத்தாளப்பிதாமகர்களிடம் காணப்படுகிறது. இதை தொடர்ந்து அவதானிக்கையில் தாம் புரிபடும். நீங்கள் அவர்களுக்குப் பிரியமான வாசகராயிருப்பின் உங்களை ஒரு மயக்க நிலைக்குக் கொண்டு போய் வரலாறு, அரசியல் பற்றிய இதுவரை சமூகத்தில் வழங்கி வந்த, உங்கள் மீது திணிக்கப்பட்டுவந்த கட்டுமானங்கள் குலைந்து போய்விடாமல் இருப்பதற்கு எந்த அதிகாரத்தின் முன்னும் மண்டியிடுபவர்கள்.
நாம் பிதாமகர்களின் பொதுபுத்திக்கு வருவோம்.

இனப்பிரச்சனையோ சாதியப்பிரச்சனையோ பெண்ணியப்பிரச்சனையோ அது இறையாண்மையைக் குலைக்கும் தீங்கான வார்த்தைகள்.

இரண்டு வன்முறைக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் பேசும்போதும் மானுடத்தின் கருணை குறித்துப் பேசும்போதும் அவர்களுக்கு வன்முறை என்று புலப்படுவது துப்பாக்கி வடிவில் இயங்கும் ஆயுதங்கள் பற்றியது மட்டுமே. அதற்கான அவசியத்தை எழுப்பும் மனிதக்குரூரங்களைப் பற்றி அவர்கள் கேள்வியெழுப்பும் அறமோ அவசியமோ இல்லாதவர்கள்.

அடுத்து அவர்களுக்கு இந்தியாவின் சுதந்திரப்போரின் மீது உள்ள மோகம் என்பதும் காந்தியை ஒரு அகிம்சாவாதியாக மற்றுமே காணும் அந்த மயக்கநிலை, அவர்கள் சமூகத்தில் எந்த உழைப்பும் பிரயத்தனமுமின்றிப் பெறும் சமூக நிலை. அது சாதியாயிருக்கலாம். பால் நிலையாய் இருக்கலாம். பொருளாதார சொகுசாயிருக்கலாம். இயல்பாகவே இப்படிப்பெற்ற அந்தஸ்துகளைக்காப்பதற்கு ஆன்மீகம் கண்டிப்பாய் ஒரு பேசுபொருளாய் இருக்கவேண்டும் தானே? அகிம்சையின் முழுப்பரிமாணத்தையும் அறியாதவர்கள்.

மேலும் அவர்கள் எந்த ஒரு தீவிரமான விவாதத்தின் போதும் மௌனம் காப்பார்கள். அது ஒரு முடிவுக்கு வந்ததும்தான் தங்களை இனம் காட்டிக்கொள்வார்கள். ஏனெனில் அவர்களின் அகராதியில் இறையாண்மையின் பொருள் அதுவே. அதுமட்டுமன்றி ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசாமலிருப்பதே போதுமானது அதை இல்லாமல் ஆக்குவதற்கு. இது தமிழ் இலக்கியச்சூழலுக்கு புதிதுமன்று.

எப்பொழுதுமே அவர்கள் இந்தியர்கள். இந்திய மண்ணின் குடிமகன்களாயிருந்தாலும் தாம் சார்ந்திருக்கும் சமூகத்தினை அண்டிப்பிழைக்கும் பிழைப்பு வாதிகள்.
அறிவார்ந்த தளத்தில் இயங்கும் எழுத்தாளர்கள் அல்ல இந்தப் பிதாமகர்கள்.

தமிழகத்தில் தீவிர இலக்கிய வட்டத்திலிருந்து ஈழப்பிரச்சனையை வரலாற்றை முன்வைத்தும், அதன் பின்னணியில் இயங்கும் அரசியலை முன்வைத்தும் எழுதிய ஒரே படைப்பாளி பிரமிள். தன்னை தமிழ் இலக்கியத்தின் தீவிரமான தளத்துக்கு உந்தித்தள்ளும் எந்த ஒரு படைப்பாளிக்கும் பிரமிளின் எழுத்துலகத்தீவிரம் வாய்த்திருக்குமா என்பது ஐயமே. அதற்குக்காரணமாக இருப்பது எல்லோரும் சிந்தனைத்தளத்தில் இணைக்க மறந்த எல்கைகளை அவர் தொட்டதே. இன்றைய பிதாமகர்கள் நடுவாந்திர இலக்கியத்தகுதிக்கும் சிந்தனைக்கும் தங்களைப்போட்டி போட்டுக்கொண்டு பணயம் வைப்பது இனியும் ரகசியமல்ல.

***

’ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை’ - பிரமிள் என்ற பிருமிள் தர்மோத் ஜீவராமு அவர்களால் எழுதப்பட்டு 1984 டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் சிங்களர் மற்றும் தமிழரின் பூர்வீக வரலாற்றைத்துல்லியமாக வரைந்து செல்கிறார்.

இலங்கைத்தமிழர்க்கு சிங்களவர்களை விட அம்மண்ணில் பூர்வீக உரிமை உண்டு தொன்மையான சாட்சியங்கள் சார்ந்து நாம் இதை நிரூபிக்கலாம்.
இந்திய வம்சாவழித்தமிழர்கள் 1840க்கும் – 1850க்கும் இடையில் தென்னிந்தியாவிலிருந்து அடிமை முறையில் கடத்தப்பட்டவர்கள். இன்று பேச்சாயிருக்கும், போராயிருக்கும், இனப்படுகொலையாயிருக்கும் தனி ஈழம் என்பது ஒரு நாளில் எழுந்ததன்று. சிங்களவர்களால் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட படிப்படியான அரசாங்க ஒடுக்குமுறைகள் தாம் அப்படி ஒரு குரலை எழும்பச்செய்ததும்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியடைந்திருந்தாலும் ஈழப்போராட்டம் முற்றும் முடிந்ததாய் ஆகாது. ஏனெனில் அது வரலாற்றுத்தேவையாக இருந்து தான் இயக்கங்களாக வடிவெடுத்தது. ஆனால் தமிழர்கள் தமது வழக்கமான குணங்களால் அறிவு சார்ந்த தளத்துக்கு இப்பிரச்சனையை நகர்த்திச் செல்லாமல் விட்ட கொடுமையால் தான் இன்று அது போராக வளர்ந்தது. இதை தற்கால எழுத்தாளர் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கேற்பிலிருந்தும் வெளிப்பாட்டிலிருந்தும் பங்களிப்பிலிருந்தும் நாம் நன்கு அறியலாம்.


பண்டைய வரலாற்றில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான அரசியல் என்பது பலத்த புரிதல்களும் ஒப்பந்தங்களும் விட்டுக்கொடுத்தல்களும் தியாகங்களும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவை இரு தரப்பிலும் இருந்ததற்கான காரணம், இரு இனத்திற்கிடையிலான புராதனக்கலப்பு, ஒருவருக்கொருவர் தங்கள் பலத்தை நிரூபிப்பதில் அறம் சார்ந்த உடன்படிக்கை, அரசியல் உதவிகள் எனத்தொடர்கின்றன.


அந்நூலில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே இருப்பது இனப்பிரச்சனை அல்ல என்பதைத் தெளிவாகவே விளக்குகிறார். வரலாற்று மயக்கங்கள் இருப்பவர் கூட இதன் வழியாக உண்மையை உணரமுடியும். ஏனெனில் 1833ல் பிரிட்டாஷார் நுழைந்த பின்பு தான் தனித்தனியாக இருந்த சிங்களம் தமிழ் என்ற இரு அரசுகளும் பிரிட்டாஷாரின் ராஜீய ஆளுகைக்காக இணைக்கப்பட்டன. இதற்குப் பின்பு நடந்தது தான் தமிழகத்திலிருந்து மலையகத்துக்குச் செய்த ஜனக்கடத்தல். இன்று வரையிலும் இவர்களும் ஈழம் சார்ந்த விஷயத்திலும் பெரிய பங்கெடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஒரு பெரிய சமூக ஒடுக்கு முறையை உணர்கின்றனர். இந்தக் கண்ணீர்க்கதையின் ஒரு பிரதிபலிப்பாக புதுமைப்பித்தனின் துண்பக்கேணியை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் அவர் நூலை வாசித்த பிறகு முக்கியமான இலங்கையின் முக்கியமான அரசியல் நிகழ்வாக எனக்குத்தோன்றுவது 1948 பிரிட்டாஷாரிடமிருந்து விடுதலை பெற்ற இலங்கையில் நடந்த முதல் பொதுத்தேர்தல். பத்து இலட்சம் இந்திய வம்சத் தொழிலாளர்கள் பத்து இலட்சம் பேர் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது தான். இதற்கிடையில் பிரிட்டாஷாரின் வரவால் நிகழ்ந்த வரலாற்றுப்பிழை தான் இன்று இவ்வளவு பெரிய அரசியல் பிழையை ஏற்படுத்தியுள்ளது. இதை பிரிட்டாஷார் இலங்கையில் இருக்கும் போது செயல்படுத்திய அரசியல் அமைப்பை மறுவாசிப்பு செய்து நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் புரிந்து கொள்ளலாம். பிரிட்டாஷாரால் தமக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நிறுவிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இதை இந்திய வம்சாவழித்தமிழர்கள் எண்ணியிருக்கவேண்டும். அவர்களின் எழுச்சியைக்கண்டு சிங்களவர் அஞ்சினர். அதே சமயம் பிரிட்டாஷார் வரும்வரை வேறுவேறான அரசுகளாக இருந்து அந்த நிலத்தை ஆண்டுவந்த சிங்களவர்க்கும் தமிழர்க்கும் அவர்கள் இந்த நிலத்திலிருந்து விலகிய பின்பு ஏற்பட்ட ஆளுகைக்குழப்பங்கள் தாம் நீட்சிகள் தாம் இன்று வரையிலுமான உரிமைப்போர்.

இந்த இடத்தில் பிரமிள் சொல்வது, தொடரும் அரசியல் பிழைகளுக்குப்பொறுப்பேற்க வேண்டியது இலங்கைத்தமிழகத் தலைமை தாம். ஏனெனில் பிரச்சனையை அறிவு சார்ந்தும் யதார்த்தம் சார்ந்தும் அணுகாமல் வர்க்கப்பிரச்சனையாக ஒரு சந்தர்ப்பவாதமாக அப்பொழுது தமது மக்கள் மட்டுமே உரிமைகளைப்பெற்றால் போதுமென்றிருந்தது. இது சிங்களவர்க்கு இலங்கைத்தமிழக மக்கள் மீது இயல்பாகவே ஓர் இளக்கார நிலையை உருவாக்கியிருக்கவேண்டும். தொடர்ந்த அவர்களின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஏதுவாக இருந்திருக்கவேண்டும்.
சிங்களத் தலைமைகளுக்கிடையே இருந்த போட்டிகளினிடையே கிளப்பிவிடப்பட்டது தான் தமிழ்த்துவேஷம். இதை பெரிய தீயாக்கி அதில் தமிழர்களை இரையாக்கிக் குளிர் காய்ந்தனர் சிங்களத்தலைமைகளும் அப்பொழுது அவர்க்கு உடந்தையாக இருந்த தமிழ்த்தலைமைகளும். அவர்களும் அறியவில்லை; எப்படி அவர்களின் வம்சாவழியினர்க்கும் அடிப்படை உரிமைகள் காலங்காலமாய் அவர்களிடமிருந்து வேரறுக்கப்படும் என்பதை.
வன்முறையின் உச்சங்களையும் சூழ்ச்சியின் சூக்குமமான வடிவங்களையும் கையாளும் ஒடுக்குமுறை வடிவம், அதற்குத் தீர்வெடுக்கையில் கோருவதெல்லாம் அகிம்சா முறை. இது உலகெங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருப்பது. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அகிம்சா முறையை மம்மி செய்யப்பட்ட ஒரு உடலாகவே காணத்தொடங்கிவிட்டனர். அது எப்போதும் தயாராக்கி வைக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள் போலவும் அது அவசியப்படும்போதெல்லாம் பசியை ஆற்றிக்கொள்ள உதவுவது போலவும். வன்முறைக்கு எதிரானதும் அல்ல அகிம்சை. அகிம்சை என்பது ஒரு நிரந்தரத்துவமான போராட்டத்துக்கு தன்னை தயார் செய்து கொள்வது. உடலையும் உயிரையும் பிரித்தறியாதது. இதையும் பிரமிள் இந்த நூலில் இலங்கை அரசியல் போராட்டத்துடன் இணைத்து விவாதிக்கிறார். அரசு செயல்பாட்டு மொழியாக சிங்களம் பயன்படுத்தப்பட்டது இத்தைகைய முதல் அரசியல் சூழ்ச்சியாகும்.

பல சமயங்களில் மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படும்போதும் அதைப்பறிக்கும்போதும் அகிம்சை எனப்படும் அவர்களின் அர்த்தத்தில் அதாவது மௌனமாய் இருந்து பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் வன்முறையைப்பின்பற்றுவது. இது மறைமுகமாக மானுடம் மீது செலுத்தப்படும் வன்முறையை ஆதரிப்பது. மனதுக்குள்ளும் மூளைக்குள்ளும் சிந்தனைக்குள்ளும் வன்முறையை ஒளித்து வைத்து செயல்படுத்துவது.

மதங்களைப்பொறுத்த வரையில் இந்தியாவும் இலங்கையும் எதிரெதிர் திருகுவடிவங்களுடன் இயங்கக்கூடியன. இந்தியாவில் பௌத்தம் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வழியாக இருக்கையில் இலங்கையில் அது ஒடுக்குவோரின் ஆதிக்க வழியாக இருக்கிறது. இதுவே மதம் எத்தகைய ஓர் அரசியல் இயந்திரம் என்பதை நேரடியாகவும் எளிதாகவும் விளங்கிக்கொள்ளப் போதுமானது. இவ்வாறு மொழி மட்டும் அல்லாமல் மதம் இனம் எனப் பிரிவினைகளுக்கான நெடுஞ்சாலைகள் பல கிளைகள் கொண்டு இயங்கும் மண் இலங்கை.

இந்நிலையில் இயக்கம் எனும் மக்கள் வடிவத்தை அதன் பண்பாடு, சமூகம், அரசியல், வரலாறு எனப் பன்முகப்புள்ளிகளோடு இணைத்துப்பார்க்காமல் தீர்வுகளும் அறிவுகளும் சொல்லும்போதெல்லாம் மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சிகளை தமிழ்ச்சமூகம் கண்டுகொண்டேயிருக்கிறது. அறிவு சார்ந்த தளத்துக்கு இப்பிரச்சனையை நகர்த்திச்செல்லாமல் மௌனமாகவோ அல்லது திசைதிருப்பவோ செய்வது மீண்டும் மீண்டும் ஒரு சமூகக்குற்றத்தை இழைப்பதற்கு ஒப்பானது. அது தமிழகத்தில் மிகச்சிறப்பாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நான் சொல்ல வருவதெல்லாம் தமிழ் ஈழம் என்பது தோல்வியடைந்த ஓர் அரசியல் வடிவம் என்றால் அதற்குக் காரணம், அதன் தீர்வுக்காக, அறிவு சான்றதொரு வழிக்கு நாம் நம்மை நகர்த்திச் செல்லாததும் தான்.

இதைத் தொடர்ந்து ஈழம் பற்றிய தமிழகத்தின் அரசியல் பார்வையையும் அதன் வெற்றிடங்களையும் வேறுவேறு புள்ளிகளில் இருந்து எழுதவும் விவாதிக்கவும் எண்ணியுள்ளேன்.


குட்டி ரேவதி

கமலா சுரையா – உடலுக்குள் ஆயுதம்ஓர் ஆவணப்படத்திற்காக கமலா சுரையா அவர்களை சில தோழிகளுடன் சந்திக்கச் சென்றிருந்தேன். மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அவருடைய படைப்புகளைப் படித்திருந்தேன். மூத்த படைப்பாளர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் ஏமாற்றங்கள் நமக்கே அவமானம் தருபவை. நாமும் அந்த வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால். அந்த ஏமாற்றம் எனக்கு கமலாதாஸிடம் ஏற்படவேயில்லை. படைப்பாளிகளை நாம் அவர்கள் படைப்புகள் வழியாகவே அறிகிறோம். அப்பொழுதைய எனது எதிர்பார்ப்பைவிட அவர் அளப்பரிய ஆற்றலுடனும் பெருந்தன்மையுடனும் இருந்தார். ஆனால் தம்மை முழுமையான ஓர் மனித உயிரியாகவும் சுயதணிக்கையற்று எழுதும் படைப்பாளியாகவும் உணரும் பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்படும் நாடு இது என்பதால் கமலாதாஸும் இதற்குத் தப்பிக்கவில்லை.

அவர் தன்னை வாழ்க்கையின் விளையாட்டுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தவர் என்பதால் அவரைப்பார்த்து விமர்சித்தவர்களையெல்லாம் அவர் எளிதாகப் புறம்தள்ள முடிந்தது. அவருக்கு, அவரின் எழுத்தும் பரீட்சார்த்தங்களும் அழைத்துச்சென்ற வெளியை இன்னொரு பெண், விடுதலையுணர்வை நுகராத பெண் அனுபவிக்க முடியுமா என்பது கேள்வியே. சுயம் குறித்த கேள்விகள் அவருக்குத்தன் இருப்பு சார்ந்து எழுந்துகொண்டேயிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தனது வாழ்க்கையை இவ்வளவு பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருக்க முடியாது. அவரின் மதமாற்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் மதம் என்பது பெண்ணுக்கு எத்தகைய ஓர் உளவியல் சுமை என்பதை உணர அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனமே அது. மேலும் அதன் வழியாக தன்னை, தனது அடையாளத்தை நிறுவுவதற்காக தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டேயிருந்தார். இந்தியாவை தனது நாடு என்று கொண்டாடுவோருக்கும் தான் ஒழுகி வந்த இந்து மதத்திலிருந்து ஒரு பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கும் தேவைப்படுவது ஒரே விதமான அரசியல் புரிதலே. மதம் என்பது உடலுக்குள் ஆயுதத்தை ஒளித்து வைத்துக்கொள்வது போன்றது.

தானே தன்னளவில் ஓர் இயக்கவாதியாக இருந்து காதல் என்பதன் அப்பழுக்கற்ற வெளிக்குப் பயணப்படத் துணிந்தார். மதத்திற்கும் பெண்ணுக்குமிடையிலான குறுகலான உறவுகளை முறியடிக்க விழைந்தார். ஆண்களின் சுயம் குறித்த அதிகார விழைவைப்போல பெண்ணின் சுயம் என்பதை அடையாளப்படுத்தும் முனைப்பை அவர் வாழ்க்கை முழுதுமாகக் கொண்டு, ஆனால் ஆண்கள் கையாளும் அந்த அதிகார வெறியைக் கையாள முடியாமல் சுயம் பற்றிய எள்ளலான ஓர் அபிப்ராயத்தை எல்லோருக்கும் கொடுத்தார். மற்ற படைப்பாளிகளைப் போல அவர் எதையுமே கடைசிவரை கற்பிக்கவோ வகுப்பெடுக்கவோ விரும்பவில்லை. மாறாக சுயக்கண்டுபிடிப்புகளுக்குக் கூட்டிச்செல்லும் பாதையாகவே எழுத்தை வைத்துக்கொண்டார்.

தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிலையில்லாமையைக் கொண்டிருந்தார். அது அவர் தன்னை எந்தச் சட்டகத்துக்குள்ளும் திணித்துக்கொள்ள முயலாமல் ஒரு பறவையாக இருக்க முயன்றதன் வெளிப்பாடே. பெண் உடலின் மீதான சமூக வெறுப்பைக் கொண்டாட்டமாகவும் அதே சமயம் அதை ஓர் எதிர்ப்பாகவும் மாற்றத்தெரிந்தவர். இந்தியப் பெண் படைப்பாளிகளுக்கு அவர் திறந்து கொடுத்த படைப்பு வெளிகள் பண்பாடும் அரசியல் துலக்கங்களும் உடையவை. முழுமையான ஒரு பெண்ணாகத் தன்னை அடையாளம் காண்பதில் அவர் கொண்ட களிப்பும் வெறியும் இலக்கில்லாததாக அவரை வைத்திருந்தது.

அன்றும் இன்றும் அவர் அனுபவித்தக் களிப்பைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஆண் படைப்பாளிகள் உண்டு. ஏற்கெனவே ஆயத்த வடிவில் இருக்கும் உலகம் ஆண்களுக்கானது என்பதை உணர்ந்திருக்க கமலா சுரையா உணர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தான் வாழ்வதற்குத் தேவையான ஓர் உலகை தானே உருவாக்கிக்கொள்ள இவ்விதம் துணிந்திருக்கவே மாட்டார்.

குட்டி ரேவதி