>
Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Wednesday, March 18, 2009

சக்தி

துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கு மெரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை யெண்ணு நினைவே சக்தி
பாம்பை யடிக்கும் படையே சக்தி
பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப்பூசி மலைமிசை வாழும்
சங்கர னன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கு மதியே சக்தி
மாநிலங் காக்கும் வலியே சக்தி
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி
சஞ்சல நீக்குந் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
விண்ணை யளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.

-மகாகவி பாரதியார்