>

Friday, April 17, 2009

கடிதக் காதை -01

அன்புள்ள வசந்திக்கு,

இந்தக் கடிதம் உன்னை சேருமாவென்று எனக்குத் தெரியவில்லை. நடுநிசியில் உறங்கந்தவறிய நட்சத்திரம் போல் நான் மட்டும் விழித்துகொண்டிருக்கிறேன். இந்தக்கடிதம் வழியாக உன்னைக் கண்டடைவது யதார்த்தமானதா என்றும் நானறியேன். இருட்டு தரும் அரவணைப்பைக் காதலன் கூடத்தரமுடியாது. தனிமையில் இருக்கும் பெண்ணிற்கு இருட்டும் உவப்பானதாகத்தான் இருக்கவேண்டும். இந்த இரவில் வார்த்தைகள் வழியாக உன்னைத்தொட இந்தக்கடிதம் இருக்கின்றது.

நானும் நீயும். உனக்கும் நினைவிருக்கலாம். சாலையோர மரங்களைப்போல நாம் வளர்ந்திருந்ததும் காட்சிப்பொருளாக மட்டுமே இருந்ததும் நமக்கு உவப்பில்லை. ஒரு விடுமுறை நாளில் சைக்கிளை மிதித்துக்கொண்டு தஞ்சாவூர் சாலையில் விரைய ஆரம்பித்தோம். நமது எவ்வளவு ஆற்றலை நாம் விட்டு விடுதலையான சிட்டுக்குருவிகளாக்கினோம், வசந்தி? சாலையோர மரங்கள் நம்மை முறைக்க ஆரம்பித்தன. அவற்றைக்கடந்தோம். செப்டம்பர் மாதம். வானத்தில் மேகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. முப்பது கிலோமீட்டர் பயணத்துக்குப்பின் மூச்சிரைத்துக்களைப்பால் சோர்ந்து போய் ஒரு புல்வெளியில் விழுந்தோம். களைத்த உடலுக்குப் புல்வெளி பஞ்சுமெத்தை. வீடு திரும்புவதற்கான தூரம் குறித்த அச்சம் தார்ச்சாலையாய் ந்ம்முன்னே நீண்டு கருத்துக்கடந்தது. இப்படித்தான்....காதலும் உறவுகளும் தரும் தருணம் சார்ந்த வெளிகளைப்பிரவேசிக்கத்துணிந்து விட்டுப் பின் திரும்பவேண்டிய தூரம் குறித்த சோர்விலும் அச்சத்திலும் அங்கேயே தங்கிப்போய்விட்டோமென்று தோன்றுகிறது.

'நாம் ஒருத்தரையொருத்தர் பிரியாம இருக்க முடியாதா?’ என ஒருநாள் சிறு பிள்ளையைப்போல் கேட்டாய். எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 'நீ கல்யாணம் செஞ்சுக்காம இருந்தா யாரையும் பிரியாம இருக்கலாம். ஏன் ஒங்க அம்மா அப்பாவக்கூடபிரியாம இருக்கலாம்’. விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் நீ உங்கள் வீட்டின் கல்யாண ஏற்பாட்டால் கலவரமாகி அதில் இழுக்கப்பட்டு உன்னாலே உன்னை மீட்டெடுக்க முடியாத வாழ்க்கையில் கரைந்தே போனாய். உன்னைத்தொடர முடியாமல் நீ சென்ற பாதையில் முட்கள் அடர்ந்து வழியை அடைத்துக்கொண்டன.

எனக்கு இங்கே ஒவ்வொரு நாளும் வேறொரு நாளாகத்தான். இந்த நாள் கடந்த காலத்தின் எந்த நாளையும் நினைவுபடுத்தாமல் புதியதாய். அல்லது அவ்வாறு பழையதாகிப் போகும் நாட்களை விரட்டத்துணிந்து விட்டேன். காலம் என்பது சக்கரம் இல்லை. அது என்னைப் பொறுத்தவரை கருமையான பச்சைப்பாதங்களைக் கொப்பளிக்கச்செய்யும் மிரட்சியான தார்ச்சாலையின் வெளி. மருங்கில் நின்ற மரங்கள் மீது நான் மிகவும் இரக்கப்படுகிறேன். என்னவென்று சொல்லமுடியாத இரக்கவுணர்வு அவற்றின் மீது. ஒரு நெடுஞ்சாலை விபத்தைக்காண நேர்ந்த விதி அவற்றுக்குத்தான். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப்புரியும் வசந்தி! பலவிதமான இரவுகளை நான் கடந்து வந்திருக்கிறேன். அந்த இரவுகளின் மீது ஒரு நிலவைப்போல உன்னைக்காவல் வைத்திருக்கிறேன். அந்த இரவு தந்த சூன்யங்களும் அபூர்வங்களும் என்னை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும் என நம்பியிருக்கிறேன்.

இந்தத்தமிழகத்தில் குறைந்தது ஒரு இலட்சம் கிலோமீட்டரேனும் நான் பயணித்திருப்பேன். ஆய்வுகளுக்காக..ஆவரணப்படங்களுக்காக.. இயக்கப்பிரச்சாரங்களுக்காக...காதலர்களுடன்... தனிமையை ஒருங்கமைத்துக்கொள்ள...மேடைகளைச்சந்திப்பதற்காக... எத்தனைத்திருவிழாக்கள்...எத்தனை மலைகள்...எத்தனை காடுகள்... எந்த வெளியிலிருந்தும் அவ்வளவு ஆயிரம் கிலோமீட்டர் தூரமும் திரும்பவேண்டியிருந்தது. தொடங்கிய இடத்துக்கே திரும்பமுடிந்தது. அந்தப்பயணத்தில் எதையும் எதிர்பார்க்காமல். எல்லா பழங்கோயில்களும் தனது இருட்டிலும் பேரமைதியிலும் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டன. ஆற்றுப்படுகைகளில் விழுந்த சூரியனிடம் நான் என்னை ரகசியப்படுத்திக்கொள்ளவில்லை. காதலர்களிடம் அறம் பற்றிப்பேசுவதை இலட்சியமாகக்கொண்டிருக்கவில்லை. அதற்குப்பின் நெடுஞ்சாலைகள் என் கனவின் அறைகளில் ஓடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால் எந்தப்பயணத்திலிருந்தும் நான் எனது வீடென்ற ஒன்றுக்கு என்னை மீட்டுக்கொண்டு வந்தேன்.

உறவுகளின் பாதைகள் தாம் சிக்கலாகி இருட்டுக்குள் நம்மைத் திணித்துவிட்டு கதவறைந்து மூடுகின்றன. உறவின் வெளிகளில் எவரும் குறுக்கிட்டு அதன் செம்பரப்பைச் சிதைத்துவிட முடிகிறது. ஒரு போர்க்களத்தை நிச்சயிக்கமுடிகிறது. கண்ணகிக்கும் கோவலனுக்கும் இடையில் மாதவி ஏன் புகுந்தாள் என்று கேட்டால் தற்செயலானது என்றோ அல்லது ஊழின் பெருவலி என்றோ சொல்வான் இளங்கோ. எனக்கு மனித மன ஓட்டங்கள் கொள்ளும் அரூபங்களாகவே இந்தக்கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. இளங்கோ கில்லாடி தான். அவன் மனதின் தரிப்பை உரித்துஎடுத்தான் கதாபாத்திரங்களிலிருந்து. அவற்றை வைத்து ஒரு கதையை சொல்லி முடித்துவிட்டான். ஆனால் அந்தக்கதாபாத்திரங்கள் எல்லாமே இன்னும் உயிருடன் இருக்கின்றன. உறவின் வலையில் சிக்கிக்கொண்ட இளங்கோவை செரித்துவிடுகிறது வலிய ஒரு கதாபாத்திரம். இதைப்பற்றிப்பிறகு பேசலாம்!ஆனால் நான் எந்தக்காலத்தினிடையில் எந்தக்கதாபாத்திரமாக உருக்கொண்டிருக்கிறேன் என என்னையே அனுமானிக்க முயற்சி செய்து பார்க்கப்போகிறேன். அது ஒரு முடிவிலாத கனவுவெளிக்குள்ளோ வெட்டவெளிக்குள்ளோ என்னை ஒரு புனலைப்போல இழுத்துச்சென்றாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

சமீபத்தில் நித்திலா என்றொரு தோழியைச்சந்தித்தேன். அவளின் கண்வெளிக்குள் பறவைகள் வானத்தில் பறப்பதைப்போல மிதக்கக் கண்டேன். அப்படி சொல்வது தான் பொருந்தும். ஆனால் அவள் ஆண்களை தன்னருகே அண்டவிட மாட்டாள். அதனால் தானோ கண்ணில் அந்தப்பறவைகளைப் பெற்றாள் என்று யோசிக்கவைத்தாள். விவாதங்களால் அவளைக்கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உனக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைப்பேன். புதியதாக ஒரு தோழி கிடைப்பதென்பது இன்னொரு வாழ்க்கை உனக்கு அறிமுகமாகப்போகிறது என்று தானே அர்த்தம்!

இம்மாநிலத்தின் நகரங்கள் எனக்கு மனப்பாடம். சிற்றூர்கள் எனக்கு வாய்ப்பாடு. முதுகெலும்பு முறிந்த சாலைகளுடைய கிராமங்களை உச்சிவேளையில் அடைந்து அங்கு வெப்பக்காற்றாக ஊதலுடன் அலையும் வெயிலை மோகினியாகக் கனவு கண்டு.....ஏன் கேட்கிறாய்...? அவை தரும் மனப்பித்தம் ஒரு கவிதைக்கும் ஒரு கோப்பை வோட்காவிற்கும் ஒருவன் என்மீது கிறுக்குப்பிடித்து தரும் முத்தத்திற்கும் நிகர். என்னைப்போல் ஊர்கள்மீது கிறுக்குப்பிடித்து அலையும் ஒருவரை இன்றுவரை நான் காணவில்லை.

ஒரு முறை அந்தத்தேரியில் எங்கெங்கும் கோடையின் சாமரம். என் நண்பர்களுடன் திரைப்படப்பிடிப்புக்காகச்சென்றிருந்தோம். வெட்டவெளி. செந்தரையும் கருமணலும் மாறிமாறி படிந்த நிலவெளி. துண்டுதுண்டாய் பானை ஓடுகள். சட்டென்று அது மூதாதையர் பூமி என்பது நினைவில் உறுத்த செருப்புகளுடன் கால் வைக்க நெருடலாய் இருந்தது. ஓரிடத்தைத்தேர்ந்தெடுத்து தோண்டினோம். பெரிய தாழி. உள்ளே பிரசவிக்கும் குழந்தைகளைப்போல சிறிய மண்குடுவைகள் ஒன்பது. வேலை முடிய ஓரிரவும் ஒரு பகலும் ஆனது. இரவினை பெளர்ணமி ஆண்டது. என்னுடன் வந்திருந்த இருபது பேரும் நானும் நிலவின் ஒளியைக்குடித்து குடித்துக் களிகொண்டோம். தூரத்தில் ஓலைகளுடன் பனைமரங்கள் பேய்களாய் மாறின. அப்படித்தான் இருக்க முடியும் பேய்கள். கட்டுக்கடங்காத பேய். உள்ளே சுழன்று கிளறும் அணங்கு. மன நடமாட்டமே ஒரு பேய்தான். இரவில் மணல் கொள்ளும் களிப்பு வெறியும் கட்டறுந்த உணர்வுகளும் தாம் பேய்களைப் படைக்கச் செய்கின்றன. உடல் தரையில் பாவாத உணர்வலையில் விழுந்த நாங்கள் பேய்களைப்படைத்து இரவை எங்களுக்குப் பழக்கிக் கொண்டோம்.

வெட்டவெளியை உடல் மோகித்துக்கொண்டேயிருக்கிறது. அது சிறைகளுக்கு மனித உடல்களுக்கு மனித மனங்களுக்குக் கட்டுண்டு கட்டுண்டு தீராத வாதையுடைய நாயைபோல ஆகிவிட்டது. அதை நான் மலையேற்றி பச்சைக்காற்றைச்சுவாசிக்கச்செய்தேன். இடைவிடாமல் நதியின் அடியில் கிடத்திப்பார்த்தேன். இது எவ்வளவு வருட உடல் நோய் என்று நான் எப்படி அறிவேன்? அருவியின் ஓலத்துடன் எனது வேண்டுதல்களைச்சமர்ப்பித்தேன். உடல் எனக்கு இசையத்தொடங்கியது. பயணங்கள் தொடர்கின்றன.

இங்கும் கோடை துவங்கிவிட்டது, வசந்தி. மரங்கள் பூக்களைக்கொண்டையாக்கி நிற்கின்றன. வியர்வை கசியும் எண்ணங்களுடன் மனிதர்கள் சாலைகளைப் புறக்கணிக்கிறார்கள். மாம்பழச்சுவை தான் எனக்கு கோடையை தொடங்கிவைக்கிறது. நிழல்கள் துல்லியமாக வீழூம் கோடையை நான் மிகவும் நேசிக்கிறேன். மரங்கள் தம் தொழிற்சாலையைத் துரிதப்படுத்துகின்றன. பார்வையை மறைக்கும் வெயிலால் பறவைகள் மெளனமாகின்றன. இந்தக்கோடை தரப்போகும் சம்பவங்களுக்காக நான் காத்திருக்கிறேன், வசந்தி.

குட்டி ரேவதி

7 comments:

ஆ.சுதா said...

கடிதக் காதையை முழுதும் படித்தேன்.
நீங்கள் ஏற்கனவே பெண் கவிஞர் என தெரியும்
அதன் ஈர்ப்பிலேயே படித்தேன். ஆனால் படித்த சில வரிகளில் எழுத்து என்னை ஆக்கிரமதித்துக் கொண்டது
கடிதத்தின் வாயிலாக பயணத்தை அனுபவத்தை இலக்கியத்தோடு படிக்க முடிந்தது. இன்னும் நிரைய எழுதுங்கள்.

Word verification ஐ நீக்கினால் பிண்ணூட்டமிட சுலபமாக இருக்கும்.

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

நன்றி, முத்துராமலிங்கம். தொடர்ந்து வாசியுங்கள். கருத்துப்பரிமாற்றத்தில் பங்கெடுங்கள். நானும் தமிழ்நதியும் வெறுமனே மெல்லுவதற்கு மட்டுமன்றி உரையாடலுக்குமான சிந்தனைத்தளமாகவும் இவ்வலைப்பூவை உருவாக்க முனைந்துள்ளோம். இலக்கிய எதேச்சதிகாரத்தை கொஞ்சம் தளர்த்தலாம் என்பதும் திட்டம்.

சென்ஷி said...

//நானும் தமிழ்நதியும் வெறுமனே மெல்லுவதற்கு மட்டுமன்றி உரையாடலுக்குமான சிந்தனைத்தளமாகவும் இவ்வலைப்பூவை உருவாக்க முனைந்துள்ளோம். இலக்கிய எதேச்சதிகாரத்தை கொஞ்சம் தளர்த்தலாம் என்பதும் திட்டம்.//

:-)) வாழ்த்துக்கள் குட்டி ரேவதி!!

தமயந்தி said...

kutty revathi.. ennai ungaluku ninaivirukalam .ilai endral ilamalum irukalam. naan dhamayanthi. ungal pathivil nithilavin kangalil ulla paravai ella pengal kangalilum parakatum

M.Rishan Shareef said...

அருமையான கடிதம் சகோதரி !
தொடருங்கள் !

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

நன்றி, தமயந்தி! நன்றாக நினைவிருக்கிறது. நலமா? எங்கே இருக்கிறீர்கள்? நானும் தமிழ்நதியும் உங்களைச்சந்திக்க ஆவலாக இருக்கிறோம். சென்னையில் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள், தமயந்தி! இந்த வலைப்பூவின் வழியாக உங்களைக்கண்டடைவது மகிழ்ச்சியாக இருக்கிறது

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

சென்ஷி மற்றும் எம்.ரிஷான் ஷெரீப் இருவருக்கும் எம் நன்றிகள்!

Post a Comment