>

Wednesday, April 8, 2009

உயிருக்கு உடலே உணவு

உடலினை உறுதிசெய்யும் தத்துவங்களாலும் வெளிப்பாட்டுவகைகளாலும் தமிழ்மரபை நிலைபெறச்செய்த மாண்பு எவரையும்விடத் தமிழ்மருத்துவர்களான சித்தர்களுக்கு உண்டு. உடலை ஒரு கருவியாக்கி அதன் வழியாகச் சமூகப்பொறுப்பை ஏற்கும் உபாயங்களை, உடல்தத்துவத்தையும் வாழ்வியல்முறைகளையும் இணைப்பதன் வழியாகக் கூறியவர்கள் அவர்கள். நோய்களைத் தீர்க்கும் முறைகள் வெறுமனே மருத்துவப்பாங்கினால் ஆனவை மட்டுமன்று என்பதை விளக்குவதன்முகமாகவும் தனது உடல்வழியான ஒரு மனிதனின் பயணம் எத்தகைய அறம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பதை வடிவமைத்துத்தந்த கடப்பாட்டிலும் இன்றுவரை தமிழ் இனக்குழுவில் ஒரு நிரந்தர சமூகஅங்கம் வகிக்கின்றனர். ஆக, உடலை முதன்மையாக்கும் அதுசார்ந்த சிந்தனைமுறையும் தமிழருடையது.

அதிகாரமிக்கவர்களின் ஆணைக்குரல், நசுக்கப்படுபவர்களின் ஓலத்தை மூடிவிடுகிறது. உடலுழைப்பு, அதிகாரப்பிரயோகங்களுக்கு எதிரானதாக அணுகப்படுகிறது. அதிகாரப்பிரயோகம் உயரஉயர உடலுழைப்பு இல்லாமையையும் தேவைப்படாததையும் ஆதரிக்கிறது. அதிகாரம், சிந்தனைத்தயாரிப்பில் ஈடுபடுவதாகவும் அதற்கான உழைப்பு, உடலுழைப்பினும் தகுதியும் சிறப்பும் மிக்கதாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெயில், உடலுழைப்பு, கடினஅசைவுகள், கரடுமுரடான நிலபுலப்பணிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சிந்தனை உற்பத்தியிலும் அனுபவப்பங்களிப்பிலும் ஈடுபடுவதில்லை என்றும், குளீரூட்டப்பட்ட அறை, கணினி இயைந்த அசைவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்மையான உழைப்பை மேற்கொள்பவர்கள் சிந்தனை உற்பத்தியில் பெருவாரியான அளவில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஒரு தனித்த பொருளாதார சிந்தனைமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இயங்காத உடலில், உழைப்பின் இயக்கத்துக்குத் தயாராகாத உடலில், சிந்தனை ஊற்றுக்கும் வாய்ப்பே இல்லை. உடலின் இயங்கியல் அத்தகையது. அத்தகைய உடலிலிருந்து அதன் மனோவெளியிலிருந்து கலை, இலக்கிய, நுண்கலை வடிவங்களும் பிறவா.

உழைக்கும் சமூகக்குழுக்கான மருத்துவமுறைகளும் கொள்கைத்திட்டங்களும் அருகிவிட்ட நவீன மாநிலமாகிவிட்டது தமிழகம். நாள்தோறும் உருவாகிவரும் வகைவகையான புதுநோய்களுக்கு எல்லாம் மனிதஇனமும் மருத்துவக்குழுமமும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபடுவதும் அதற்கான தற்காலிக நிவாரண நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதுமாக இருக்கும் தருணத்தில், பாரம்பரிய மருத்துவமுறைகள் கொண்டிருந்த தர்க்கபூர்வமான உத்தி கணக்கிலும் கருத்திலும் கொள்ளப்படவேண்டியது. உடலின் ‘நோய் எதிர்ப்பு ஆற்றலை’அதிகரித்துக்கொள்வதும் அதற்கான அன்றாட உணவுமுறையையும் வாழ்வியலையும் வடிவமைத்துக்கொள்வதுமே நவீன நோய்களையெல்லாம் எதிர்கொள்ளும் எளிமையான சூத்திரமாக இருக்கமுடியும். நோயை எதிர்க்கும் திறனுடையதாக உடலை வளர்க்க வேண்டுமேயன்றி, தோன்றும் நோய்களை எல்லாம் அவற்றின் பண்பாட்டு அரசியல் காரணிகளை நிவர்த்தி செய்ய முயலாது, உடல்நோயை மட்டுமே களைய முயல்வது அடுத்தவர் புண்ணுக்கு எல்லாம் நாம் மருந்திட்டுக்கொள்ளும் மனநோயில்தான் கொண்டு சேர்க்கும்.
உடலின் உறுப்புகளை இயந்திரத்தின் பல உதிரிப்பாகங்களைப் போலப் பார்க்கும் நவீன மருத்துவமுறை, நவீன வாழ்க்கையின் போலிமையிலிருந்து தனக்கான தத்துவத்தைத் திருடிக்கொண்டதாயிருக்கிறது. உடல்கூறு, உடல்தத்துவம், மனதத்துவம் இவற்றை ஒன்றிணைத்து, உடல்அங்கங்களை ஒன்றோடொன்று உறவுற இணைக்கும் ஓர் உயிரியல் தத்துவமாகவே ஒரு மருத்துவமுறை செயல்படவேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட மனிதஇனக்குழுவின் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களை உள்வாங்கியதாகவும் அவ்வினக்குழுவின் நாகரிகவளர்ச்சிக்கேற்ற எதிர்கால வாழ்வியலை எதிர்கொள்ளத்தக்கதாயும் இருக்கவேண்டும். பல்வேறு பழங்குடி இனக்குழுக்களின் பாரம்பரிய மருத்துவமுறைகள் சடங்கியல் வழியாக உள்ளோட்டமான மனிதமேம்பாட்டிற்கும் இயற்கையுடன் மனிதனைப் பிணைப்பதாகவும் உள்ளன. அவர்கள் வழங்கும் மருந்துகளும் எதிர்விளைவோ பக்கவிளைவோ இல்லாதவையாகவும் பல தலைமுறைகளின் அனுபவஆய்வுகள் வழியாகப் பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன. உயிர் காக்கும் பல சஞ்சீவினியாகவோ நோய்தடுக்கும், எதிர்க்கும் ஆற்றல்மிக்கதாகவோ உடலின் இடுக்குகளில் மறைந்திருக்கும் நோய்காரணிகளைக்கூடத் தேடிக்களைவதாகவோ இயங்குகின்றன. நவீன மருத்துவமுறை நோய்க்காரணத்தைக் குறிப்பிட்டு, நோயுற்ற அங்கத்தை உடலின் முழுமையிலிருந்து ஓர் உதிரிப்பாகத்தைப்போல் பிரித்து அணுகும் அல்லது அவசரமாகப் பிரிக்கத் துணியும் ஒன்றாக இருப்பதும் நவீன மருத்துவமுறையினால் எதிர்கொள்ள முடியாத நவீன நோய்வடிவங்கள் பெருகுவதும் மனிதஇனம் நோய்கள் போராக உருவெடுக்கும் பேரபாயத்தை நெருங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு சிறந்த மருத்துவச்சித்தாந்தம் என்பது மீண்டும்மீண்டும் தன்னை மனிதவாழ்வினோடு நெருக்கமாய் இனங்காணுவதாயும் புத்தாய்வு செய்ய அனுமதிப்பதாயும் நவீன வாழ்விற்குள் நுழைந்து மனிதஉடலின் ஆரோக்கியம் பேணுவதற்கேற்ற புனரமைப்பு செய்வதாயும் இருக்கிறது.

தற்போதைய மனித ஆரோக்கியம் குறித்தான சிந்தனையும் நடவடிக்கைகளும் சுகாதாரம், அழகு என்ற இரண்டை மட்டுமே மேலோட்டமாக வலியுறுத்துவதால், வலிமை, நீண்ட ஆயுள் பற்றிய மதிப்பீடுகள் அற்றுப்போய்விட்டன. சுகாதாரம் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தின் சாதியஅமைப்பில் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தாத, யதார்த்தத்திற்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாகவே நுகரப்பட வேண்டும். அழகின் அளவுகோல்கள் ஒப்பனையையும் சலிப்பூட்டும் ஒரேபடித்தான மனிதஉடல் வடிவமைப்பையும் முன்னிறுத்துவதாக இருக்கின்றன. இவை இரண்டிலுமே மனித மனஅவசமும், இயற்கையின் கூறாக மனிதஇயக்கமுமே மதிக்கப்படுவதில்லை.
வலிமைக்கும் நீண்ட ஆயுளுக்கும் மனிதன் வாழும் சூழலும், மேற்கொண்ட வாழ்க்கைமுறையும் சார்ந்த உணவுமுறையும் பழக்கவழக்கங்களம் தேவைப்படுகின்றன. இயற்கையின் பருவகால மாறுதல், மரங்களின் மீது செயல்படுத்தும் ஆதிக்கத்தைப் போலவேதான் மனிதன் மீதும் செலுத்துகின்றன. அதற்கேற்ற உணவுச்செயல்பாடு நோய்த்தன்மைக்கு உடல் ஆளாகாமல் காப்பதோடு, கடுமையான பருவங்களை எதிர்கொண்டு நீள்வாழ்வு காணும் வலிமைமிக்கதாயும் மனிதஉடலைக் காக்கிறது. மனிதஉடலில் பருவத்தின் தடங்கள் அன்றாடத்தன்மை உடையது. ஆகவே அன்றாட உணவுப்பழக்கமும் அதை அனுசரிக்கத்தக்கதாயும் பருவமாறுதலைப் புரிந்துகொண்டதாயும் இருக்கவேண்டும்.

தமிழகத்தில் பெண்களின் ஆரோக்கியமும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இன்றைய அரசியல்சூழல் ஏற்படுத்தித்தந்த அதிகாரஅமைப்பு, மருத்துவவசதிகள், ஆலோசனைகளுக்கு ஒப்புக்கொடுத்தவையாக இருக்கின்றன. தன் உடல்ஆரோக்கியம் பேணுவதும் மருத்துவஉரிமைகளைப் பெறுவதும் பெரிய சவாலாகவும் போராட்டமாகவும் இருக்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் அறுவைப்பிரசவம் செய்துகொள்ளும் பெண்கள் இரண்டு விழுக்காடாக இருக்கையில் தமிழகத்தில் இவ்விழுக்காடோ அறுபது ஆக இருக்கிறது. இது மருத்துவஅறம் மீறிய நிலையாகவும் இயற்கையானதொரு மனித உடல்நிகழ்வு, நோயாக அணுகப்படுவதாகவும் பெண்களின் நீள்வாழ்வைக் குறைப்பதாகவும் உள்ளது. பெண்களின் வாழ்வுயிர் குறித்த வெகுசனமதிப்பையே இது காட்டுகிறது. பிரசவம் மருத்துவர்களால் அதிகப் பொறுமை கோரும் ஒரு கலையாக அணுகப்படாது, வியாபார உத்திகளோடும் அறிவியல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவர்களாக முன்னிலைப்படுத்தும் பெருமிதத்தோடும் மட்டுமே பார்க்கப்படுகிறது.

நமது பண்பாட்டுஅரசியல் பெண்கள் மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளும் பிற்போக்குக்கருத்துக்களும் ஒடுக்குமுறைவடிவங்களும் அவர்களைத் தமது உடல்பிரச்சனைகள், நோய்கள் எழுப்பும் அடையாளங்கள் குறித்து நெருங்கிய உறவுப்பெண்களுடனோ தோழிகளுடனோ கூட எந்த உரையாடலையும் ஏற்படுத்த இயலாத இறுக்கத்தையும் தயக்கங்களையும் எச்சரிக்கைகளையும் கொண்டுள்ளன. இவ்வகையில் தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் ஒரு கொள்ளைநோயைப்போல உருவெடுத்துள்ளது ஓர் அபாயச்சங்கொலியாகும். மேலைநாட்டு மருத்துவத் திட்டங்கள், எல்லோரையும் முறையாக ஆண்டுதோறும் பரிசோதித்து, புற்றுநோயினை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதன்வழி புற்றுநோயினால் ஏற்படும் பெருவாரியான இறப்புவிகிதத்தைக் குறைத்துள்ளன. நமது சமூகச்சூழலோ புற்றுநோய் என்றாலே மரணம் நிச்சயம் எனும் அளவுக்கு அதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் பெற இயலாததாகவும் மருத்துவப் பரிசோதனைமுறைகள் ஏழைமக்களின் கைகளுக்குக் கிட்டாதவையாகவும் அரசு கீழ்த்தட்டு மக்களுக்கு அவற்றை வழங்குவதில் காட்டும் மெத்தனமும் கொடியவறுமையும் நோயை வெல்ல முடியாததாக்குகிறது. பெண்களின் பண்பாட்டுச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அரசுஇயந்திரம், அவர்களின் ஆரோக்கியம் குறித்தான தனது கொள்கைத்திட்டங்களிலும் பிற்போக்காகவே இருக்கிறது.

சமூகமாற்றத்திற்கான சிந்தனையையும் செயல்பாட்டையும் வகுக்கும், பொறுப்பேற்கும் மனிதக்குழுமம் உடல், மனஆரோக்கியம் மிக்கதாகவும் இருக்கவேண்டியதிருக்கிறது. நவீனம் மனிதஉடலைப் பீடித்ததன் வழியே சிந்தனையையும் பற்றிக்கொண்டது. மருத்துவக்கோட்பாடுகளை வாழ்வியலிலிருந்து பிரித்து அணுகும் ஒரு மனிதச்சமூகம், கற்கால மனிதனையே பிரசவிப்பதாக எண்ணவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தனித்த மனிதஉடலும் கூட ஓர் அரசியல் பிரதியே.


-குட்டி ரேவதி

No comments:

Post a Comment