>

Wednesday, April 8, 2009

‘பூமியின் இரத்தம் தண்ணீர்’


மனித நாகரிகம், நீர்நிலைகளை ஒட்டி வளர்ந்தே பிரபஞ்சத்தைப் பேணும் வித்தையைக் கற்றுக்கொண்டது. தண்ணீரின் அருமை உணர்ந்த சமுதாயமாகத் தனது பண்பாட்டுக்கூறுகளைக் கட்டியெழுப்பிச் சேகரித்துக்கொண்டது. மனிதனோடு ஓர் உயிரியாகவே தண்ணீர் பிரதானம் வகிக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் எல்லாப் போராட்டங்களும் அவை சார்ந்த அரசியல் வடிவங்களும் நீரையும் அதற்கான போரையும் மையமாக வைத்தே கிளர்ந்துள்ளன. நீரை வழிபடும், பயன்படுத்தும். ஒரு பண்பாட்டு ஊடகமாக மாற்றும் சமூகம் வழியாகவே மானுடநாகரிகம் திரண்டு வந்திருக்கிறது. கடல், ஆறு, ஏரி இன்னபிற நீர்நிலைகள் ஒரு மௌனப்பாய்ம நிலையிலிருந்து மானுடவாழ்வின் மீது தமது அக்கறையைத் தொடர்ந்து அளிக்கின்றன. அதற்கான வாழ்வியலை வடிவமைத்து மேற்கொள்ளும் மனிதன் கண்டுபிடித்த விவசாயமுறைகள், கலைவடிவங்கள் எண்ணற்றவை. கடலை ஓர் உடலாகப் பார்க்கும் மீனவச் சமுதாயமும் கடலினைப் பாதுகாத்தல் குறித்த நெறிமுறைகளைத் தீவிரமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது. நீர்நிலைகளின் இயற்கையான சீற்றங்கள் குறித்த அச்சம் மனிதனுக்கு இருந்தாலும் அவை விரித்துத்தரும் அழகியல்வெளிகள், வாழ்வியற்பயன்பாடுகள், ஆன்மஎழுச்சிக்கான கூறுகள், களிப்பு கூட்டும் தருணங்கள், பருவமாறுபாடுகளின் அரண்கள் குறித்த விழிப்புணர்வை, மானுடவாழ்வின் இறையாண்மை குறித்த பாடங்களைத் தன்னிச்சையாகப் பயிற்றுவிக்கும் கூடங்களாக விளங்குகின்றன. நீரை மையமாக வைத்து எழுப்பிய அநேக அரசியல் இயக்கநிலைகளைப் புரிந்துகொள்ளமுடியும். இயற்கையின் மூலங்களில் ஒன்றான தண்ணீரைச் செம்பொருளாய் நோக்கும் தமிழ்ச்சமுதாய மரபில் இன்று நாம் வந்துசேர்ந்திருக்கும் இடமோ, அதை ஒரு கழிவுநீராயும், வாணிபத்திற்குரியதாகவும் ஆக்கியிருக்கும் நிலை.


சிலப்பதிகாரத்தில் ‘காவிரி’ ஒரு கதைமாந்தராய் உலவிப் போற்றப்படும் கட்டங்களும், கதையின் போக்கை நிர்ணயிக்கும் காட்சிகளும், விதியினை நிர்ணயிக்கும் தருணங்களும் அக்காலத்து காவிரி – மானுட உறவின் மாண்பினையும், காவிரியை ஒரு பாடுபொருளாக்கி அதைச் சுற்றி ஓர் அரசியல் உருவெடுக்கும் பாங்கினையும் காட்டுகின்றன. சங்ககாலத்தினூடும், இலக்கியங்களோடும் பாய்ந்து இன்றைய நம் வாழ்வினையும் துளைத்துப்பாயும் காவிரியின் கரை நெடுகிலும் பயணித்தாலும் எந்த இடத்திலும் அது ஓரிடத்தில் பாய்வதுபோல் ஓடுவதில்லை. அதன் ஒயில் இடத்திற்கு இடம் மாறிக்கொண்டேயிருக்கிறது. சில ஊர்களில் வீடுகளின் கொல்லைப்புறம் வழியாக ஓர் இளம்பெண்ணைப்போல், ரகசியங்கள் புதைந்த நெஞ்சோடு ஓடும் நதியில் நீராடிக் களைப்பாற்றும் பெண்கள் நுகரும் சொல்பெறா அனுபவம் எத்தகையதாயிருக்கும் என்பது பதிவில் அடங்காதது. ‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்- திசை திரிந்து தெற்கேகினும் - தற்பாடிய தளியுணவிற் - புட்டேம்பப் புயன் மாறி – வான் பொய்ப்பினும் தான் பொய்யா – மலைத்தலைய கடற்காவிரி – புனல் புரந்து பொன்கொழிக்கும்’ என்ற உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை வரிகளும் காவிரியின் புகழ்பாடுகின்றன. ஆனால் இன்றைய காவிரியின் படுகைகள் பல இடங்களில் வெளிறிய வளமற்ற உடலுடன் காணப்படுகின்றன.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நீரை வழிபடும் விழாவான இந்திரவிழாவை முக்கியப்படுத்துகின்றன. புத்தர் துறவறம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தது கூடரோகிணி என்றும் ஆறுதான். சாக்கியர்களின் அரச எல்லையில்தான் கோலியர்களின் அரசு இருந்தது. இந்த இரு அரச எல்லைகளும் ரோகிணி ஆற்றால் பிரிக்கப்பட்டிருந்தன. ரோகிணியின் நீர், தங்கள் வயல்களின் பாசனத்திற்காக சாக்கியர்கள், கோலியர்கள் ஆகிய இரு தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஒவ்வொரு பருவத்திலும் அவ்விரு தரப்பினருக்கிடையே யார் முதலில் ரோகிணியாற்றின் நீரை எடுப்பது, எவ்வளவு எடுப்பது என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன. அவ்வாதம் முற்றிப் போராக உருவெடுக்க இருந்த தருணத்தில், போரிடப் பணித்த சங்கத்தின் வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் புத்தர் நாடுகடத்தப்பட்டார். இத்தகைய அரசியல் திருப்பங்களை ஏற்படுத்துவதில் ஆறுகள் முக்கிய இடம்வகிப்பது நிகழ்காலத்திலும் கண்கூடானது.

நிலவுடமையைப் போன்றே பெண்ணையும் ஓர் உடைமையாக நோக்கிய சமுதாயத்தில் ஆண்மை வடிவமைத்த வளர்ச்சித்திட்டங்களும், அவசர விளைச்சல் சார்ந்த நடவடிக்கைகளும் இயற்கையை ஒரு வெறித்தன்மையுடன் அனுபவிக்கும் மனிதசமுதாயமாக மாற்றியுள்ளன. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கணவனோ, மனைவியோ ஒரு கண்ணாடிக்கூண்டுள் அனுப்பப்படுவார். வீசும் காற்றில் சுழன்றடிக்கும் பணக்காகிதங்களை ஒருவர் எவ்வளவு கைப்பிடித்துச் சேமிக்கிறாரோ அவ்வளவையும் அவரே வைத்துக்கொள்ளலாம். மனிதனின் பேராசை மனோபாவத்தைப் பரீட்சித்துப்பார்க்கும் அல்லது அந்நோக்கத்தை வளர்க்கத் தூண்டும் இந்நிகழ்ச்சி, இயற்கையின் இயற்பியலுக்கு முற்றிலும் புறம்பானதொரு வாழ்க்கையைக் கைக்கொள்ளத்துணியும் மனிதனுக்கானது. இயற்பியலின் தருக்கமோ பேராசைக்கு முற்றிலும் எதிரானது.

மண் கட்டமைப்பாளர்களும் நீர் வல்லுநர்களுமான பெண்களின் பெரும்பாலான காலமும் ஆற்றலும் வாழ்க்கையும் சிந்தனையும், மண்ணையும் தண்ணீரையும் பேணுவதில் செலவிடப்பட்டுள்ளன. மண்ணுரிமைப் போராட்டங்கள் அந்தந்த நிலப்பரப்பிலிருந்து எழும் பெண்ணிலைவாதக்கோட்பாடுகளோடு நெருங்கிய உறவு கொண்டிருப்பதன் காரணமும் அதுவே. வீட்டின் நீர்மேலாண்மையும், சமூகத்தின் நிலமேலாண்மையும் பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் பெண்கள் தம் கருப்பையைப் பேணுவது போன்றே நீர். நில ஆதாரங்களையும் அழிவிலிருந்து மீட்கமுடியும். பெண்கள் தமது வயதையும், பருவங்களையும், நினைவுகளையும் இயற்கையின் சம்பவங்களோடு இணைத்து உள்வாங்கிக் கொள்வதிலிருந்து, பெண்கள் இயற்கையைத் தமது உடலின் காலமானியாகக் கருதுவது புலனாகும். இயற்கையின் சுழற்சியில் அங்கம் வகிக்கும் பெண்களின் நீர், நில நிபுணத்துவத்திடம் எந்த அறிவியலாளரும் முன்னிற்க முடியாது.


சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடுநிசி 2-3 மணிகளில் கூட குடங்களோடு வீட்டுப்பெண்கள் குடிநீர் வண்டிகளுக்காகக் காத்திருந்ததும் அது குறித்தான காலவரையறைகளும் இன்று முற்றிலும் மாறியதற்குக் காரணம் தீவிரப்படுத்தப்பட்ட மழைநீர்ச்சேகரிப்புத்திட்டம். அதேசமயம், வேனிலின் உக்கிரத்தை நிழல் பரப்பும் மரங்களற்ற தார்ச்சாலைகளில் பாயும் கானல்நீரோட்டங்கள் சித்திரமாக்குகின்றன. நீரின் மாயஅலையாக கானல்நீரலை.


வேளாண்மைச் செயற்பாடுகள், விஞ்ஞானம், மண்ணைச் சூறையாடல், விதைகளின் கருவறுத்தல் என நிலத்தையும் நீரையும் ஆக்கிரமிக்கும் அதிகாரத்தின் வடிவங்களை ஆண்கள் கண்டடைந்து செயல்படுத்தும்போதெல்லாம், பெண்கள் நீர்நிலவெளிகளின் பண்பாடுகளிலும் விழாக்களிலும் ஆழ்ந்த தமக்கான விடுதலையின் கதவுகளைத் திறந்துகொள்கின்றனர்.


நாளுக்குநாள் வெப்பமாகிக்கொண்டிருக்கும் பூமியில் நீரின் சுனைகளைப் பெருக்குவது அத்தியாவசியமாகத் தோன்றுகிறது. இச்சுனைகள் மேகமூட்டங்களுக்கிடையே, பெரும் மரக்கூட்டங்களுக்கிடையே, இயற்கையின் மீதான பரிவு கொண்ட தொடர்செயற்பாடுகளுக்கிடையே ஒளிந்திருக்கின்றன.
நீர்நிலைகளை மையமாகக்கொண்டு தமது தினப்படி நடவடிக்கைகளைப் பின்னியிருப்பதும், நீரைத் தமது அந்தரங்கத் தேவைகளுக்காகக் கொணர்ந்துவந்து சேர்க்கக் கைக்கொள்ளும் உபாயங்களும் சிரமங்களும் ‘நீர்’செலுத்தும் அரசியலை விளங்கவைப்பவை. சுடுமணலில் பல மைல்கள் நடந்து சென்று நீரைச் சுமந்து வீடு சேர்ப்பதையே அன்றாடப் பணியாகவும், அதற்காகவே பலமணி தூரங்கள் நடக்கப் பயன்படுத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் தமிழகத்தில் இலட்சக்கணக்கானோர். நீர்நிலைகள் தூர்ந்துபோன தொலைதூரக்கிராமங்களின் வாழ்வியல்மொழி, யதார்த்த மனிதனின் அகராதியிலடங்கா ஓர் இயல்பைக் கொண்டிருக்கும்.


நீர்நிலைகளையும், மழையையும், தமது புலனுணர் அறிவையும் ஆதாரமாகவும் மூலதனமாகவும் கொண்டு செயல்பட்ட விவசாயி இன்றைய நவீனகாலத்திற்குப் பொருந்தாத, அவசியமற்ற ஓர் ஆளுமையாகிவிட்டான். அவன் மீதான சூறையாடல் பலவடிவினது. பசுமைப்புரட்சியும் இயற்கைநசிவும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கருப்பை தூர்ந்த பெண்களைப் போன்றதான பூமியின் மீது ஏதும் செய்யத் தெரியாமல் நிகழும் ‘விவசாயிகளின் தற்கொலை’ நவீனவாழ்வின் சிக்கல்கள் எதிரொலிக்கும் ஒரு படிமமாகவே தோன்றுகிறது. நீரை அரக்கர்களைப் போன்று குடிக்கும் பசுமைப்புரட்சி விதைகளின் முன் பருவமழை, மண்ணின்தன்மை என எல்லாவற்றோடும் ஒழுங்கமைதி கொண்டு வளரும் பாரம்பரிய விதைகளின் முன் நவநாகரிக மனிதனின் அவசியமற்ற புரட்சிகள் கண்விழிக்காத விதைகளாகிவிட்டன. பசுமைப்புரட்சி விதைகளைப் போலவே மனிதர்களும் நீர்வெறி பிடித்த மனிதர்களாய் மாறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு விவசாயியின் அனுபவஅறிவு என்பது நீரின் ஓட்டம், வானியல் புரிதல் அவை சார்ந்த அடையாளக்குறிகளைப் புரிந்துகொள்ளல், மண்ணின் உயிர் என எல்லாவற்றையும் ஒன்றுகூட்டிப் பொருளுணர்ந்துகொள்ளும் மாண்பு மிக்கது. வறுமையை ஓர் அழகியலாகச் சித்தரிக்கும் போக்கும், வறுமையைக் காரணம்காட்டி விவசாயியின் வயிற்றில் எரிமலைக்குழம்பை ஊற்றும் வளர்ச்சித்திட்டங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அன்று.


அண்மையில் தொண்ணூறு வயது நிறைந்த ஒரு மூதாட்டி மறைந்தபோது பல வருடங்களாய் அவர் மண்கலயத்தில் சேகரித்துக் காத்துவைத்திருந்த பாரம்பரிய நெல்விதைகளின் விதைநெல்கள் தொல்லியல்துறைக்கு மிகுந்த வியப்பைக் கொடுத்துள்ளன. இக்குறிப்பிட்ட நிகழ்வு வெளிப்படுத்தும் பெண்களின் பொதுவான மரபார்ந்த மனோபாவமும் மரபார்ந்த அறிவுத்தொகைமை மீது கொண்டிருக்கும் காப்புரிமையும் எந்தப் பெரிய போராட்டத்திற்கும் புரட்சிக்கும் எதிர்நிற்கக்கூடியது. தனிப்பெண்ணின் விழுமியம் இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து பேணுவதாலும் போற்றுவதாலும் நிறைந்திருக்கிறது.


மண்ணின் நீரோட்டங்களுக்கும் நீர்வெளிகளுக்கும் கட்டுப்பட்ட தாவரஇனங்கள் அச்சூழலை அனுசரித்து வளர்கின்றன. இவை நீரை நிலைப்படுத்தவும், சேகரிக்கவும் செய்கின்றன. இம்மரம், செடிகொடிகளைப் பறவைகள் நாடிவருகின்றன. மேலும் பறவைகள் தமது வாழிடங்களாக இந்நீர்நிலைகளையும், மரங்களையும் அடையாளப்படுத்துகின்றன. நீர்நிலைகள், தாவரவெளி மற்றும் பறவைகளின் பெருக்கம் இயைந்த சூழலை மிருகங்களும் பறவைகளும் தமது வாழ்க்கைக்கு நிழலாக்குகின்றன. இத்தகைய உயிர்ச்சக்கரத்தை ‘இயற்கை’ செவ்வனே சமைக்கிறது.
‘நீரும் சோறும் விற்பனைக்கல்ல’ என்ற அறச்சிந்தனை கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் எல்லாம் பைகளில் விற்கப்படுகின்றன. சென்னையில் வாழும் ஒருவரின் நீர் பற்றிய சிந்தனையும், அதைச் சார்ந்த செயல்பாடுகளும் வேடிக்கையானவை. சென்னை வாழ் மக்கள், வேறு ஊர்களுக்குப் பயணிக்க நேரிட்டாலும், நீரின் தூய்மை குறித்த அச்சம், கிராம நீர்வழிமுறைகளைப் பழித்தல், எவ்வளவு தாகம் எடுப்பினும் சுத்திகரிக்கப்பட்ட குப்பிகளில் அடைக்கப்பட்ட நீரையே பருகும் தீவிரம் என அவர்கள் பயணத்தை நீர் குறிப்பிடத்தக்கதாக ஆக்கிரமித்திருப்பதற்குக் காரணம், சென்னையின் நீர்வள ஆதாரங்கள் சாக்கடையாக மாறியிருப்பதும், நீர்நிலைகள் சார்ந்த ஆரோக்கியமான வாழ்வியல் செயல்பாடுகள் அற்றதொரு வாழ்க்கைமுறையும், வணிகரீதியாக இயங்கும் எதன் மீதும் அதீதமான நம்பிக்கை கொண்டிருப்பதும்தாம்.


கடந்தகால வரலாற்றில் நீரைச் சூறையாடிய நிகழ்வுகள் நிறைய நிகழ்ந்துள்ளன. இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சிறுசிறு கிராமங்களின் வழியே பயணிக்க நேரிடும்போதெல்லாம் கண்ணுக்குத் தென்படும் வயலும் வயல்சார்ந்த வெளிகளும், வண்ணத்துப்பூச்சிகளைப்போல் பல உறைந்த வண்ணப்புடவைகளில் பெண்கள் ஓர் ஒழுங்கமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அழகும், தனக்கு உரிமையில்லாத மண்ணோடு அவர்கள் உறவுகொண்டு தாவரஇனம் பெருக்க முன்வைக்கும் மன்றாடலும் கண்பார்வையை இழுத்துக்கட்டுபவை. நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியலும், ஒடுக்குமுறையும் நமக்குப் புரியாததன்று. ஆனால் மண்ணின் பசுமையைப் பேண அன்றாடம் நீரோடும் வெயிலோடும் மண்ணோடும் பொழுதுகளோடும் போராடும் பெண்கள் தம் உயிருக்கு இணையான ஒன்றாய் நிலத்தையும் நீரையும் அவதானிக்கும் தார்மீக உணர்வுடைய மேற்கண்ட காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, நமது புவியியலுக்குப் பொருந்தாத கருவேல மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் கொண்ட நிலவெளி. மெய்ஞானத்துக்கும் யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் வழிவிடாத இம்மரங்களாலும் இவை தரும் வருமானத்தாலும் என்ன பயன்?

பாலாற்றுக்கரையெங்கும் எறும்பின் சாரையைப்போல மண்ணை அள்ளிப்போக அணிவகுத்து நிற்கும் லாரிகள், கடலுக்குள் அணுமின்கழிவுகளை வெளியேற்றிச் சமாளிக்கத் திட்டமிட்டிருக்கும் அணுமின்நிலையங்கள். ஆற்றுநீரை குழாய்கள் போட்டு உறிஞ்சிக்குடிக்கும் நச்சுநீர்ப்பான தயாரிப்புஆலைகள், நதிநீரை இணைக்க முண்டியடிக்கும் அரசியல் ஆர்வலர்கள், சேதுசமுத்திரத் திட்டம் என்னும் பெயரில் தண்ணீர்ப்பாலம் கட்டத்துணிந்தவர்கள் எனக் காட்சிகள் விரிய நீராதார வளர்ச்சித்திட்டம், நீர் மேலாண்மை, நீர்ச்சிக்கல் என்ற வகையில் நீர் தொடர்பான பிரச்சனைகளை அலசுவது அதை மலினப்படுத்துவதாகும். நீருடன் மனிதனும் மற்ற உயிரினங்களும் கொண்டிருக்கும் ஆன்மஉறவைப் புரிந்துகொள்ள வலியுறுத்தும், கற்பிக்கும் கலை இலக்கிய வடிவங்களும் தர்மங்களுமே மேன்மையானவை.


வேறுபட்ட நிலவெளிகளோடும் பொழுதுகளோடும் ஒரு செம்புலத்தன்மையோடு திகழ்ந்த தமிழகம், முற்றிலும் ஒரு பாலைவெளியாகி பித்தவெடிப்புகளோடு காணப்படுகிறது. சித்தமருத்துவத்தில் கருங்குருவை அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ‘காடி’நீர் உலோகங்களை மடியவைக்கவும், காரங்களைச் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அந்நீர் அன்றைய சுத்திகரிக்கப்பட்ட நீரினும் தூய்மையும் சிறப்பான பண்புநலன்களும் நிறைந்தது. இத்தகைய மரபார்ந்த நீர்ப்பயன்பாட்டையும் சேகரிக்கும் எண்ணிலாத தொழில்நுட்பங்களையும் தனது பண்பாட்டில் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம் குளிர்ந்த நிலங்களற்ற பாலையானதாக மாறியிருப்பதன் படிமங்கள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன.

சென்னையில் ஒரு மழைநாளைப் பற்றிய நினைவு மிகவும் அந்தரங்கமானது. சுழன்றுசுழன்று சென்னையை வளையவந்தது மழை. எவருடைய அந்தரங்கவெளியினுள்ளும் மற்றவரை நுழையவொட்டாதபடி ஒவ்வொருவருக்கும் இடையே திரையைப்போல வீழ்ந்து சரிந்தது. பெண்கள் எல்லோரும் நீர் வடியும் உடலங்களாய், அவர்கள் தமக்குத் தேவையானவற்றையெல்லாம் பூமியிடம் வேண்டிப் பெற்றுக்கொள்வதைப்போல, பூமி மழையை வேண்டிப் பெற்றுக்கொண்டிருந்தது. ஏனெனில், ‘பூமியின் இரத்தம் தண்ணீர்’.

குட்டி ரேவதி

No comments:

Post a Comment