>

Thursday, April 16, 2009

நாவல் போல எழுதிக்கொண்டிருக்கும் வடிவத்தின் ஒரு பகுதி

இன்று அதிகாலையிலேயே உறக்கம் கலைந்துவிட்டது. உன்னோடு பேசவேண்டுமென்ற நினைப்புடன்தான் கண்விழித்தேன். ஊட்டியின் குளிர் எழுந்திருக்கவிடாமல் இழுத்து இழுத்துப் பிடிக்கிறது. நீண்ட நேரம் அந்தக் கதகதப்பினுள் அமிழ்ந்து கிடந்தேன். தற்காலிகமாக அருளப்பட்ட சுகத்தை துளி சிந்தாமல் துய்த்துவிடும் வேட்கை. அடுத்து என்ன… மணி அடித்தால் சாப்பாடு, எழுத்து, உறக்கம், சிந்தனை, தனிமை… ஒரு ஆணாக இருப்பதன் சௌகரியங்கள் விடுதியறைகளில் மட்டுமே பெண்களுக்கு வாய்க்கின்றன. ‘வேலையற்ற, எழுத்தாள ஆண்’என்று வேண்டுமானால் ஒரு வசதிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.

எழுத எழுத ஒன்று புலனாகிறது. புல் வளர்ந்து மூடும் ஒற்றையடிப்பாதையென, இறந்தகாலம் பின்னழிந்து செல்கிறது. வலிகளை வரிகளாக மாற்றிப் பரணில் எறிந்துவிட வெறிகொள்கிறேன். மனதைக் கெட்டிப்படுத்திக்கொண்டு தீ தின்னக் கொடுத்துவிடுவது இன்னமும் உத்தமம்.

மௌலி! நீ எனது நாட்களில் நுழைவதன் முன் எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். கட்டுப்பாடான, குடும்பத்திலும் சமூகத்திலும் அக்கறையுள்ள, உறவுகளின் கதகதப்பில் பாதுகாப்பாக, தீங்கிழைக்கச் சம்மதியாத, சாத்தியமுள்ள இடங்களில் மிக உண்மையாக நடந்துகொள்ளக்கூடிய, ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியல்களால் நாட்களை நிறைத்துக்கொள்வதன் வழியாக குற்றவுணர்வைத் தவிர்த்துக்கொள்ள முயல்கிற, நம்பும் கொள்கைகளில் சமரசங்கள் செய்துகொள்ளப் பிடிக்காத ‘அக்மார்க்’ நல்ல மற்றும் தமிழ்ப் பெண். சமூக அளவுகோல்களின்படி நானொரு அருமையான குடும்பப்பெண்!

த்தூ! நாசமாய்ப் போகட்டும்! என்னை நானாக இருக்க அனுமதிக்காத சமூக மதிப்பீடுகள்.
இந்த அகலிகை காத்துக்கொண்டிருந்தது ராமனின் காலடிபட அல்ல; இந்திரனின் அணைப்பில் மயங்க. ‘நல்ல பெண்’ அரக்கு முத்திரையிடப்பட்ட சிறை எனக்கு மூச்சுமுட்டியது. எல்லோருக்கும் எப்போதும் ‘தாயாக’இருப்பது சிரமம் மௌலீ! எனது தாபத்தை, ரசனையை, வாசிப்பை, காமத்தைப் பகிர்ந்துகொள்ள யாருமற்ற உள்வட்டம் மிகத் தனி. கருப்பை இருட்டென்றாலும் எவ்வளவு பாதுகாப்பானது. பெண்கள் வாழும் அறைகளைப் போலில்லை அது.

‘பெண்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்கள்’என்று காதலர்கள் தொட்டு கவிஞர்கள் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அரைத்த அரதப் பழசான வாக்கியங்களைத் தன்னுணர்வின்றிச் சொல்வது நமக்கே சாத்தியம். ஆனால் மௌலி! ஒரு சட்டைக் கசங்கலில் விழுத்தும் கவனத்தைக் கூட எங்கள் முகக் கசங்கல்களில் விழுத்துவதில்லையே நீங்கள். – திருமணத்தின் பின் என்று சேர்த்துக்கொள்.
இந்த உலகம் உங்களுக்கானது; உங்களால் வெற்றிகொள்ளப்படக் காத்திருப்பது. பெண்ணுடலும் பந்தயப்பொருள்தான். வழுக்குமரத்தின் உச்சியில் கட்டப்பட்ட பணமுடிச்சுத்தான். கைப்பற்றியாயிற்றெனில் சரசரவென இறங்கிவிடவேண்டியதுதான்.

நானும் ஒருபோதில் வெற்றிகொள்ளப்பட்டேன். போரின் பின்தங்கும் சூனிய நகரமென ஆனேன். அந்நகரத்தில் பாடிய பறவைகள் எங்கு போயின? வளர்ப்புப் பிராணிகள் என்னவாயின? சிதிலமடைந்த கட்டிடங்களுள் துடிக்கும் ஆன்மா என்னவாகும்? தலையறுந்த மரங்களினுள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? வீதிகள் தமது நீண்ட விழிகளால் தனது மனிதர்களின் மீள்திரும்புகைக்குக் காத்திருப்பதை யாரோ நினைந்துருகுவர்?

திருமணம் பெண்களைச் சாய்த்துவிடுகிறது என்று நான் சொன்னால், நீ திடுக்கிட மாட்டாய். நான் என்ன கதைப்பேன் என்பது உனக்கு மனப்பாடம்.

முதலில், பிடித்த கவிதை – பிடித்த புத்தகம் - பிடித்த கவிஞர் - பிடித்த வலைப்பூ - பிடித்த பாசுரம் - அது பிடிக்குமா… இது பிடிக்குமா… என்னைப் பிடிக்குமா? இணைய அரட்டை எங்கு கொண்டு சேர்க்குமென்று அறிந்த நண்பர்கள் அறிவர். அவ்வளவுதான்! ஆயிற்று!

உனக்கு கனிவான பெண் வேண்டியிருந்தாள். எனக்கு கனவுகளில் நான் கண்டு தழுவிய காதலன் வேண்டியிருந்தான். உனது தேவை ஒரு மடி. எனது தேவை ஒரு தோள். தோளும் மடியும் மீறிச் செல்வோம் என்று எனக்கும் தெரியும். நீயும் அறிவாய்.
நான் காதலனாயிருக்கக் கேட்டேன். நீ கணவனாயிருக்க விழைந்தாய். அதிகாரத்தின் கொடியை என்மீது பறக்கவிடவேண்டும்; யாரும் அறியாதபடி.

பெண் எனும் சலிக்காத ஞாபகமூட்டலில் விழிபிதுங்கும் கோடிக்கணக்கான பெண்களில் நானுமொருத்தி. வீட்டில் எனக்கு நானே பூட்டிக்கொண்ட விலங்குகளை உடைத்தெறியும் என் பிரயத்தனத்தின் வழியில் எதிர்ப்பட்டவன் நீ. ‘என் பங்கிற்கு இந்தா ஒரு பூட்டு’என்றால் தாள்பணிந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டாமா நான்? பெற்றுக்கொள்ளவில்லை! ‘இது நெருப்பு… மடி தாங்காது’என்று போய்விட்டாயா என் அன்பே! ‘நான்’ என்ற என்னையும் காதலின் பொருட்டு இழக்கத் தயாராக, கீழைத்தேய நச்சுநிழலில் வளர்ந்த செடியாகவும் சித்தமாயிருந்தேனல்லவா…த்தூ! இந்த எச்சில் எனக்கன்றி உனக்கில்லை!

ஆற்றாமைதான். ஐயமில்லாமல் ஆற்றாமைதான்.

முதல் கோடரி வெட்டு எனது நண்பர்களின்மீது. ‘வலைப்பூவில் உன்னைப் பற்றி எழுதுகிறான்’என்று புகார் செய்தாய். எழுதட்டுமே!

“நண்பர்களாலும் காதலர்களாலும் ஆன

இந்த உலகத்தைக் கொண்டாடுகிறேன் ஓஷோ!”

என்று எழுதியவள் நானல்லவா? என்னையொருவன் நேசித்து கவிதை எழுதினால் எனக்கு மகிழ்ச்சிதான். அதனையிட்டுக் களிகொள்வது ‘வேசி மனம்’எனில், நான் வேசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். இந்தக் கண்ணகி வேடம் களைப்பாயிருக்கிறது. அணிகலன்கள் உறுத்துகின்றன. மேகலை எத்தனை பாரம்.

எல்லாம் கட்டுக்கதை! கற்பு என்பது கட்டுக்கதை என்று உண்மை பேசிய ஒருத்திக்கெதிராக விளக்குமாற்றை உயர்த்திய உங்கள் காலடியின் கீழ் பெருக்கித் தள்ளப்படுவதற்காக எத்தனை நூற்றாண்டுப் புழுதி காத்திருக்கிறது. ஆள்பவரிலிருந்து அடித்தட்டு மக்கள் வரை கற்பு என்ற கற்பிதத்தை, ஆண் என்ற அதிகார விருட்சத்தின் ஆணிவேர் அசையாமலிருப்பதற்காகத்தானே தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

மௌலீ! நீ ஒரு தடவை கேட்டாய் “நீ ஏன் கூட்டங்களுக்குப் போகிறாய்? அங்கு என்ன அறிவுமழையா பொழிகிறது?”என்று. இலக்கியக்கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம் ‘இடி விழ’என்று நினைத்துக்கொண்டுதான் போகிறேன். மேடையையும் சபையையும் ஆண்களே நிறைத்திருக்க, ஆங்காங்கே ஒரு சில பெண்கள் பாயசத்தில் பயறு போலவோ, மலத்தில் புழுக்கள் போலவோ (இந்த உவமானம் உனக்குக் குமட்டுமே) அமர்ந்திருக்கப் பார்ப்பது எத்தனை ஆயாசம் தருகிறது. பெண்களே இல்லாத சபையைப் பார்த்து ‘சகோதரிகளே’என்று யாராவது விளித்தால் ‘அட கொக்கமக்கா’என்றுதான் வையத் தோன்றுகிறது.

‘பெண்களை யார் தடுத்தார்கள்… போகவேண்டியதுதானே..?’என்ற மேம்போக்கான, பதிலுக்குக் காத்திராத சோம்பேறிகள் இந்தப் பந்தியிலிருந்து கழன்றுகொள்ளவும். ‘காலையில் எழுந்து கக்கூசுக்குப் போய்… காப்பி கலந்து… கலவி முடித்து கண்ணயரும்வரை..’என்று பட்டியல் போட்டு ‘அதனாலே பெருமக்களே!அவளால் இலக்கியக் கூட்டங்களுக்குப் போகமுடியாது’என்று வகுப்பெடுக்காமலே நிலவரம் தெரியும்.

இலக்கியக் கூட்டங்களில் அறிவுமழை கொட்டுவதில்லைத்தான். பல சமயங்களில் தூக்கம் கண்ணைக் கட்டுவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், ஒரு ஆர்வம், எழுத்தின்பாலான கிறக்கம், யாராவது அரிதாக அறிவாக செறிவாகப் பேசமாட்டார்களா என்றொரு எதிர்பார்ப்பு, நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு.. இதையெல்லாம் வேண்டித்தான் போகிறேன். உன்னைப்போல் காதலர்களும் கணவர்களும் இருக்கும்வரை, நாங்கள் சமையலறைக்கு நேர்ந்துவிடப்பட்ட பெட்டைக்கோழிகள்தான்.

மௌலி! உன்னைப்போல்தான் பல ஆண்கள். ஒன்றின் நகல் மற்றொன்றாய். “நீங்கள் பெண்ணாக இருப்பதன் நிமித்தம் உயர்த்திப் பிடிக்கிறார்கள்”என்று அண்மையில் ஒரு அறிவாளி பேசினான். வாசகர்களையும் திரைப்பட ரசிகர்களையும் இத்தனை குறைவாய் மதிப்பிட்டுத்தான் இவ்வளவு தேக்கம். நிலா, கடல், முகில், பட்டாம்பூச்சி, வானம், மழை, துயரம் இன்னபிற சொற்களை மட்டும் முதலாய் வைத்து மாற்றிமாற்றி இட்டுக்கட்டினால் எத்தனை காலத்திற்குப் பிழைத்திருக்க முடியுமென்றெனக்குத் தெரியவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு அழிக்கமுடியாதது. அந்த ஈர்ப்பின் பொருட்டு ஒன்றுமில்லாததை உசத்தி என்பவன் வாசகனே அல்ல. அந்த ரசனை மழைக்கால விட்டில்களின் ஆயுளையொத்தது.

இன்று என்னவோ தெரியவில்லை. பேச்சு ஒரு போக்காகவே போய்க்கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு கோபம். ஏதோ ஒரு கொதிப்பு. இது வழக்கமாக நான் உனக்கு எழுதும் கடிதத்தின் சாயலில் இல்லை.

எனது கவிதைகளைப் பற்றி நீ சொன்ன ஒரு வாக்கியத்தை நான் எனக்குள் பொத்திவைத்திருக்கிறேன். ஏனென்றால், என் எழுத்தின் மீது நீ ஒரேயொரு தடவைதான் மயிலிறகால் வருடியிருக்கிறாய்.

“எனக்கு உன் கவிதைகளின்பால் மரியாதை இருக்கிறது. வலியுணர்ந்து, அதை வாசிப்பவர் உணருமாறு அவர்களுக்குள் கடத்துவது எளிதன்று. உனக்கு அது வாய்த்திருக்கிறது. உனது வலிகளின் மீது முத்தமிடுகிறேன்”

எனக்கு உன் எழுத்தின் மீது கொஞ்சமல்ல; நிறையவே மதிப்பிருக்கிறது. சரியான இடத்தில் சரியான நேரத்தில் இல்லாமல் போகிறவர்கள் மறக்கப்படுகிறார்கள். அவ்வளவே! இலக்கிய அதிகாரங்களின் ஆதிக்கத்தை மீறி நல்ல எழுத்து நிலைக்கவே நிலைக்கும்.

“போகட்டும் போ! புண்ணாக்குப் பயல்கள்… என் கவிதை நிற்குமடி!”

புகைவளையங்களினூடே வித்துவக் கர்வம் பொதிந்த உன் வார்த்தைகள் மிதந்து வருகின்றன. உன் கர்வம் உனக்கொரு மகுடந்தான். நான்கூட ‘புண்ணாக்கு’என்று திருப்பியடிக்கப் பழகியிருக்கிறேன். என்னிடமும் திமிரின் சாயல் தலைதூக்கவே செய்கிறது. எல்லாம் உன் சகவாசந்தான்.

நீயே சொல்! அந்தக் கம்பீரச் சுழலில் கவிழ்ந்துபோன சிறு படகா நான்?

எப்போதும் என்னைக் கிழிக்க குறுவாளோடு அலைகிற எனது நண்பன் சொல்வான்.

“உனக்குள் ஒரு கீழைத்தேய அடிமை இருக்கிறாள். அவள் ஆளப்படுவதை வரவேற்கிறாள்.”

அவனுக்குப் பொறாமை. காதலின் தரிசனம் கிட்டாத பாவி அவன். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். ‘அப்படி’ அல்லது ‘இப்படி’ என்று ஓருருவாய், வார்க்கப்பட்ட பதுமையாய் இருக்கவேண்டுமா என்ன? ஓருருவே எனதென்றால் நான் பேருருவாய் ஆவதெப்படியோ? என்னின் அதிகபட்ச சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுபவளாக மாறவேண்டும். காதலில் கனிபவள் கம்பீரம்கொள்ளும் தருணங்கள் இல்லையா என்ன? காதலும் ஒருவகைக் கம்பீரம்தானே... சிலையென கல்லினுள் சிறையுண்டு கிடவேன். நெகிழ்ந்து உருமாறும் பேய்ப்பெண் நான்.

பசிக்கிறது. இது வீடில்லை. ஆண்களால் பரிமாறப்படும் உணவுச்சாலைக்குப் போகிறேன். இங்கு நகைப்புக்குறியிட இது வலைப்பூ அல்ல.


-தமிழ்நதி

குறிப்பு: நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் - அதை அப்படிச் சொல்வது பொருந்துமோ என்னவோ வடிவத்தில் அடிக்கடி தன்னை மாற்றிக்கொள்கிறது. மேலே நான் எழுதியிருப்பது அதில் இடம்பெறும்.. பெறாது. அதை அதன் போக்கில் விட்டிருக்கிறேன். 'தன்னைத்தான் எழுதிச்செல்கிறது' என்று சொல்வது மிகையில்லைத்தானோ?

11 comments:

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

just checking

பிரேம்குமார் said...

ஓ! குட்டி ரேவதி, தமிழநதி கூட்டணியா? கூட்டணிக்கு வாழ்த்துகள்

இலக்குவண் said...

//ஒரு ஆணாக இருப்பதன் சௌகரியங்கள் விடுதியறைகளில் மட்டுமே பெண்களுக்கு வாய்க்கின்றன. ‘வேலையற்ற, எழுத்தாள ஆண்’என்று வேண்டுமானால் ஒரு வசதிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.
//
//எனது தாபத்தை, ரசனையை, வாசிப்பை, காமத்தைப் பகிர்ந்துகொள்ள யாருமற்ற உள்வட்டம் மிகத் தனி//

//மௌலி! ஒரு சட்டைக் கசங்கலில் விழுத்தும் கவனத்தைக் கூட எங்கள் முகக் கசங்கல்களில் விழுத்துவதில்லையே நீங்கள். – திருமணத்தின் பின் //

//உனது தேவை ஒரு மடி. எனது தேவை ஒரு தோள். தோளும் மடியும் மீறிச் செல்வோம் என்று எனக்கும் தெரியும். நீயும் அறிவாய்.
நான் காதலனாயிருக்கக் கேட்டேன். நீ கணவனாயிருக்க விழைந்தாய். //
// “நீங்கள் பெண்ணாக இருப்பதன் நிமித்தம் உயர்த்திப் பிடிக்கிறார்கள்”என்று அண்மையில் ஒரு அறிவாளி பேசினான். //
//பசிக்கிறது. இது வீடில்லை. ஆண்களால் பரிமாறப்படும் உணவுச்சாலைக்குப் போகிறேன்.//

Miga arumaiyana (unmayana) varigal. Punaivu enraalum ... Art is the extention of LIFE thaaney (Tolstoy enru Ninaikiren).

Oru vinnappam : Antha Glass la konjam athigam michcham vachiruntha naangalum share pannipom illa. oru yekkathai ye kodukirathu antha GLASS.

மிஸஸ்.தேவ் said...

உங்கள் கூட்டணி எழுத்துக்கள் அருமை குட்டி ரேவதி ,தமிழ்நதி .

//மேடையையும் சபையையும் ஆண்களே நிறைத்திருக்க, ஆங்காங்கே ஒரு சில பெண்கள் பாயசத்தில் பயறு போலவோ, மலத்தில் புழுக்கள் போலவோ (இந்த உவமானம் உனக்குக் குமட்டுமே) அமர்ந்திருக்கப் பார்ப்பது எத்தனை ஆயாசம் தருகிறது. பெண்களே இல்லாத சபையைப் பார்த்து ‘சகோதரிகளே’என்று யாராவது விளித்தால் ‘அட கொக்கமக்கா’என்றுதான் வையத் தோன்றுகிறது//


இந்த வரிகளைப் படித்ததும் உண்மையில் அதிரச் சிரிக்கவே தோன்றியது ,உண்மையை இத்தனை பட்டென போட்டு உடைக்கும் வண்ணம் எழுத்தில் வடித்திருப்பது அழகு.

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

நன்றி பிரேம்குமார்,

கூட்டணி என்ற வார்த்தையைக் கேட்டாலே அரசியல் கயமைத்தனம்தான் ஞாபகம் வருகிறது. ஏதாவது ஒன்றைப் பற்றிப்பிடித்துக்கொண்டே வாழவேண்டியிருக்கிறது. நாங்கள் இருவரும் எழுத்தைப் பிடித்திருக்கிறோம். அல்லது எழுத்து எங்களைப் பிடித்திருக்கிறது. ஆரோக்கியமான நட்பு இருப்பதனால் இதில் சிக்கல் வர வாய்ப்பில்லை.

லஷ்மண்,

அந்தக் குவளையில் இருப்பது போதாமல் இருக்கலாம். ஆனால், போத்தலில் இருக்கிறது அல்லவா? இப்படியும் சொல்லலாம். வலைப்பூவில் குறைவாக எழுதிக்கொண்டிருக்கலாம்; ஆனால், மனத்தின் ஆழத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. மதுவும் புனைவும் மயக்கமே. (தத்துவம் கொட்டுது பாருங்க.. அதுவும் வைனைப் பற்றிப் பேசினால்)

நன்றி மிஸஸ் தேவ். தொடர்ந்து வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பதி said...

இந்த எழுத்துக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள் !!!!!!! :)

//வலைப்பூவில் குறைவாக எழுதிக்கொண்டிருக்கலாம்; ஆனால், மனத்தின் ஆழத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. மதுவும் புனைவும் மயக்கமே. (தத்துவம் கொட்டுது பாருங்க.. அதுவும் வைனைப் பற்றிப் பேசினால்)//

:)

Anonymous said...

நெகிழ்ந்து உருமாறும் பேய்ப்பெண் நான்.....
உங்கள் எழுத்தை படித்து பிரமித்துப் போய் விட்டேன்.
இனி தவறாமல் தொடர்ந்து படிப்பேன்.
உமா மஹேஸ்வரி.

Anonymous said...

நெகிழ்ந்த்து உரு மாறும் பேய்ப்பெண் நான்.......
உங்கள் வரிகளை படித்து பிரமித்துப்போனேன்....நன்றி!!
இனி தொடர்ந்து வாசிப்பேன் உங்கள் எழுத்தை....
உமா.

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

நன்றி பதி,

அங்கு இங்கு என்று எங்கு சென்றாலும் தவறாமல் வந்து வாசித்துக் கருத்துச் சொல்லும் உங்கள் நல்லிதயத்திற்கு எங்கள் நன்றி.

நன்றி உமா மஹேஸ்வரி,

எனக்குத் தெரிந்து இரண்டு உமா மஹேஸ்வரிகள் எழுதுகிறார்கள். நீங்கள் மதுமிதா என இயற்பெயர் கொண்டவராஅன்றேல், தொலைகடல், யாரும் யாருடனும் இல்லை, இறுதிப்பூ இவையெல்லாம் எழுதியவரா? அல்லது இரண்டு பேருமே இல்லாத வேறொரு உமாவா? 'ராமச்சந்திரனா என்று கேட்டேன்' நினைவில் வருகிறதா? நகுலனின் வரிகள் எங்கெல்லாம் உதவுகின்றன பாருங்கள்:)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான எழுத்து சகோதரி. மௌலீக்கள் எங்கும் கண்ணுக்குப் புலப்படாத விலங்குகளை வைத்துக் கொண்டு நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நாவலில் இப்பகுதியைக் கட்டாயம் சேருங்கள் சகோதரி !

தமிழ்ப்பறவை said...

//வலைப்பூவில் குறைவாக எழுதிக்கொண்டிருக்கலாம்; ஆனால், மனத்தின் ஆழத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. மதுவும் புனைவும் மயக்கமே. (தத்துவம் கொட்டுது பாருங்க.. அதுவும் வைனைப் பற்றிப் பேசினால்)//
வாழ்த்துக்கள்...
எழுதுங்கள் காத்திருக்கிறேன் வாசகனாய்...

Post a Comment