>

Friday, April 24, 2009

பாசறை

அம்மாவின் விபத்து

அம்மாவுக்கு வலி மிகுதியாக இருந்தது. என் உடல் அவள் உடலுக்குள்ளிருந்து தான் வந்தது என்றாலும் அவள் வலியை என்னுடல் ஏற்றுக்கொள்ள முடியாதபடிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது போலும். என் அண்ணன் இருகைகளாலும் விழுந்த இடத்திலிருந்து அவளைத்தூக்கி வந்து கிடத்தினான். அப்போதிருந்த வலியில் அம்மா சுருண்டு கிடந்ததில் அலுவல், நட்பு, கனவு, திரைப்படம் என தீஞ்சுவைகளால் பல கிளைகளுக்கும் திசை விரித்திருந்த என் உலகமே சுருண்டுவிட்டது. எனது ஆற்றாமையும் கோபமும் உச்சிவெயிலாய் என்னை எரிச்சலூட்டியது. ஆனால் அம்மாவின் உள்ளமும் தனது அறியாமையின் இருட்டை எங்கள் முன் பாதையாக்கியதில், சோர்ந்து போயிருந்தது. நாங்கள் ஐவருமே தயாரானோம். அவரை எழுந்து நடக்கச்செய்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் அவளின் வலியைப்பற்றி ஆராய்ந்தோம். அவளே தேடிக்கொண்ட வலியென்றாலும் அது அதே வழக்கமான கண்ணீருடனும் துடிப்பினுடனும் பரவிக்கொண்டிருந்தது. அவளைச்சுற்றிலும் எமது கண்ணீர்த்துளிகளை வாடாத பூக்களாய் இறைத்து வைத்தோம். அவை வாடும் போதெல்லாம் அவள் தனது கதைச்சுருளை வெளியிலெடுக்க அனுமதித்தோம். அக்கதைச்சுருளில் வார்த்தைகளால் எழுதப்படாத கதைகள் உணர்வின் தீரங்களாய் விரிந்து கிடந்தன. கொற்றவை பத்ரகாளி பற்றிய ஒரு கதை கற்பூரச் சுடராய் எழும்பியது அவள் கண்களில். அவள் நெஞ்சம் வலியால் பொதும்பிய ஒரு கனியாக இருப்பதை அம்மா எங்களுக்கு விளக்கினாள். ஆகவே தான் சிறிது வலியை அவளிடம் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு விளையாட்டு காட்டினாள். இந்தக்கதை அவளை குழந்தைகளுக்கான கற்பனை நரம்புகளுடையவளாக்கியது. கதைகளில் இரத்தம் சிந்தாத வலியும் எல்லைகளற்ற புனைவும் அறம் மீறாத பயணமும் நிறைந்திருக்கும். பேரக்குழந்தைகளுக்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமுடைய கதைகளைத்தான் சொல்வாள். அவளுக்குத்தெரியும் குழந்தைகள் தாம் கேட்கும் கதை நேரத்தைவிட கற்பனைக்காலத்தைக் கூட்டிக்கொள்ளும் வலிவுடையன என்று. இவ்வாறு தனது வலியையெல்லாம் கதை நரம்புகளுக்குக்கடத்தி விபத்தின் விளைவை எளிதாக்கினாள். அந்த அறையின் குளிரூட்டியைப்போல அவளது கதைகள் குளிர்வித்து பல சமயங்களில் உறையச்செய்தன குழந்தைகளை. அம்மாவின் மெல்லிய ரோமங்கள் சிலிர்த்தெழுந்த போது குழந்தைகள் தமது பேரன்பால் அந்த ரோமங்களை நக்கின. அம்மாவின் பால்யத்திலிருந்து அக்குழந்தைகளின் பால்யம் நூற்றாண்டு தூரத்தில் இருந்தது. ஆகவேதான் கதைக்காலம் குறைந்து போயிருந்தது என நினைக்கிறேன்.

ஒரு பதிப்பாளரின் உரையாடல்

அவர் தனக்கு ஓய்விருக்கும்போதெல்லாம் தனது கைபேசியின் எண்களை அழுத்தி எதிரியின் நண்பர்களுக்குப் பேசுவார். ஊரடங்கியும் உறங்காத நண்பர்கள். எதிரிகள் என்று அவர் நினைப்பவர் கூட அவருடன் துறை சார்ந்தவரோ அல்லது வியாபாரம் சார்ந்தவரோ அல்ல. தனது மூளைக்குள் விஷநீர் ஊறச்செய்பவராயிருந்தால் போதுமானது. எதிரிகளைப்பல வருடங்கள் எதிர் நின்று கூட நோக்கியிருக்க மாட்டார். ஆனால் அவரது கண்கள் எதிரியின் புறங்கால்களில் நிலை குத்தியிருக்கும். பாம்பின் கால் பாம்பு அறியும். உரையாடலுக்கு வருவோம்:
‘என்னங்க... அது புழுத்துப்போன பெண்ணியம்!’
‘நல்ல வேள.. அப்படி அவங்களோட புக்க எதுவும் போட்டு நீங்க புண்ணியம் கட்டிக்கலையே.’ என்று நமது நண்பர் அவரை தனது பதிலால் மடக்குவதுடன் சம்பந்தமில்லாம அதெல்லாம் எதுக்கு நீங்க பேசுறீங்க என்னும் தொனியில்.
’சரியாச்சொன்னீங்க...ஆனா இது ஒரு அரிப்பா இருக்குங்க. அவளுங்க ஒரு நூறு பக்கம் எழுதினோன்ன புத்தகம் போட்டுடறாளூங்க. நம்ம பசங்க ஆயிரம் பக்கம் எழுதிக்கிட்டு பொழப்பு இல்லாம அலையுறாங்க.’
‘பொழப்பு இல்லாமலா எழுதுறாங்கங்கறீங்க. வன்மந்தான் வார்த்தையா ஊறுதுன்னு வச்சுக்குங்களேன். பொம்பளங்க வன்மத்த எப்படி வார்த்தையில காட்டுவாங்க. காட்டுனா உயிரோட இருக்க முடியுமா என்ன. புருஷங்காரன விடுங்க. இன்னொரு எழுத்தாளன பத்திக்கூட எழுத முடியாது.’
‘இவங்க வாழ்ற வாழ்க்கையெல்லாம் யாரால கிடைக்குது? ஒரு பொம்பள எழுத்துல கூட தத்துவ தரிசனம் இல்லையே? அப்புறம் பெண்ணியங்கிற வகையறாவே ஏதோ கெட்ட வார்த்த போல இருக்கு எனக்கு.’
‘ஏதாவது ஒரு படைப்பாளின்னு சொல்லாதீங்க. குறிப்பிட்டு யாரயாவது பேர் சொல்லி சொன்னீங்கன்னா புரிஞ்சுக்க வசதியா இருக்கும்’
‘எல்லாரையும் பத்திதான் சொல்றேன். இலக்கியத்துல பத்து வருஷத்த காலி பண்ணிட்டாங்க. இவங்களால ஒரு காலத்தோட இலக்கியப்போக்கே திசை திரும்பிடுச்சு.’
‘தீவிர இலக்கியத்தளத்தை நோக்கி கருத்தாக்கவியலை அவங்க திருப்ப முனஞ்சத தான சொல்றீங்க. என்னத்த சொல்றது... சிற்றிதழ்ங்கிற பேர்ல எல்லா இதழ்களும் நடுவாந்திரமான வேலைகளத்தான் செய்யுறாங்க. வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சு. அரிப்புக்கு சொரிஞ்சுக்கிட்டதுமாச்சு. இல்லையா? என்னமோ அப்படி பாக்கையில இந்த பெண்கள் எழுதுறது மட்டும்தான் அந்த இலக்கியத்தீவிரத்த விட்டுடாம இருக்குதுன்னு நான் நெனக்கிறேன்.’
’ஆயிரம் பக்கம் எழுதுறவங்கள நடுவாந்திரமான எழுத்தாளர்னா சொல்றீங்க?’
‘ஆயிரம் பக்கம்னாலும் சொல்றதுல வியாபாரத்தனமான எழுத்தாளர்கள மிஞ்சிட்டாங்க. எனக்கென்னமோ ஜனரஞ்சக எழுத்தாளர்கள்கிட்ட இருக்குற நேர்மை கூட இவங்கக்கிட்ட இல்லை. இவங்கெல்லாம் தாங்கள ’சிந்திக்கிற மிஷின்’கிற நெனப்பத் தோல் உரிச்சுடலாமின்னு கேட்டுக்கிறேன்’
டொய்ங்... தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டது.

வரலாறும் பார்வையும்

வரலாறு என்பது ஆவண வடிவத்தில் நூற்களாக படிவங்களாக துருப்பிடித்த பொருட்களாக பாழடைந்த கோயில் சிற்பங்களாக உருக்கொண்டிருக்கின்றது இன்னும். இதை நாவலாக்குவது என்பது வெறுமனே அவற்றைத்தொகுப்பதில் தான் போய் முடிகிறது. நூல்கள் மியூசியங்களின் குறுக்கு இளைத்த வடிவம் என்றும் சொல்லலாம். வெறுமனே வரலாற்றின் ஆதிக்கத்தகவல்களைக் கட்டமைத்துப் புனைவதிலிருந்து வேறுபட்டதாய் நான் கண்டது ஜோ டீ குரூஸின் ஆழிசூல் உலகு மட்டுமே. ஆய்வும் வரலாறும் ஒடுக்கப்பட்டவர் மீதான அக்கறையும் இவரது படைப்பில் நேர்மையாக வெளிப்படுகிறது. அதற்குக் காரணம் அவரும் மீனவர் சமூகத்தைச்சார்ந்தவர் என்பது மட்டுமேயன்று. புனைவின் வெளிக்குள் வரலாற்றை சரடாய் நீளச்செய்கிறாரே அன்றி அதை ஓர் அதிகாரமாய் பயன்படுத்துவதில்லை. ஆக இன்றைக்குமான சமூகவெளிக்குள்ளும் வரலாற்றின் நீட்சிகளைக் கண்டுபிடிக்கமுடிகிறது, அவரால்.
இன்று ஆதிக்க அதிகாரத்தின் படிநிலைகள் மாறும்போது ஆதிக்க மக்களின் ஆவணப்படுத்தப்பட்ட போர்த்தகவல்களும் அடையாளங்களும் அவர்களின் பெருமிதங்களாக வலிந்து கொண்டாடப்படுகின்றன. தங்களின் வரலாற்றுப்பெருமிதங்களை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் விதமான புனைவுகளாக எழுதுகின்றனர். இதனால் வரலாற்றின் நிகழ்வுகள் காலத்தின் படிமங்களாக மாறாமல் நீர்த்துப்போகின்றன. மேலும் படைப்பு வெளியில் நிகழ்கால சம்பவங்களிலிருந்து விலக்கிக்கொள்ளும் உணர்வும் மேலோங்குகிறது.
நாவல் மரபினை தொடர்ந்து நோக்குகையில் விசித்திரமான உணர்வு பீடிக்கப்பட்டவர்களாய் இப்படைப்பாளிகள் மாறுவதும் கண்கூடானது. சிக்கலான பன்முனைப்போக்குகள் கொண்ட வரலாறு என்பது ஒரு காலகட்டத்தின் நிகழ்வுப்படுகை. மேலும் வரலாறு என்பது இறந்த காலத்தையே பெரும்பான்மையும் குறிப்பதால் அதை நிகழ்காலத்துடன் ஒப்பு நோக்காது அதை ஒரு செவ்வியல் வெளியாகக்காண்பது நாகரிக வளர்ச்சிக்கு எதிரானதாகவே கருதப்படும். வீணே பெருமை பேசித்திரிவதற்கு வரலாறு உதவாது. வரலாற்றை அப்படியே பதிவு செய்து விட்டு அதைப்புனைவு என்று கூறுவதும், அதன் திரிபுகளை செவ்வியலாக்குவதும் தமிழகத்தில் வழக்கில் இருக்கும் ஒன்றாக இருக்கிறது. இதற்கு மாறாக மரபின் பற்றுக்கொடியாக வரலாற்றை மாற்றும் முயற்சிக்கு நுண்மாண் நுழைபுலம் அதிகமாய் தேவைப்படுகிறது.

-குட்டி ரேவதி

2 comments:

ஆ.சுதா said...

முதல் கட்டுரையை படித்து விட்டேன்.
அடுத்த இரண்டையும் அப்புறம் படிக்கிறேன்.

//அம்மாவின் பால்யத்திலிருந்து அக்குழந்தைகளின் பால்யம் நூற்றாண்டு தூரத்தில் இருந்தது. ஆகவேதான் கதைக்காலம் குறைந்து போயிருந்தது என நினைக்கிறேன்.//

உண்மை. நல்ல எழுத்துக்களை விரும்பி படிக்கலாம்
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

கதை சொல்லும் அம்மாக்கள் இப்போதும் இருக்கிறார்களா? அப்படியே அவர்கள் சொன்னாலும் அவர்கள் பால்யத்தில் தெரிந்து கொண்ட கதைகள் எல்லாமே நினைவில் இருக்குமா? என்று கேள்விகள்
எழுகின்றன எனக்கு.

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

கதைகள் கேட்கப்படுவதால் மட்டுமே உருவாவதில்லை.

ஒவ்வொரு அனுபவமும் கதையாகத்தான் மாறுகின்றது.

மேலும் பால்யத்தின் ஈரத்திலிருந்து தான் வாழ்க்கைக்கான புத்துயிர்ப்பை ஒவ்வொரு மனிதனும் பெற்றுக்கொள்கிறான்.

ஏதோ ஒரு குறிப்பிட்ட அனுபவத்துடன் பால்யம் தனது எல்லையைக் கண்டடைகிறது.

Post a Comment